முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் முன்பு தீக்குளித்த பறையர் பேரவை தலைவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் குருவிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிமாறன். அவர், தமிழ்நாடு பறையர் பேரவைத் தலைவராக பதவியில் இருந்து வந்தார். அவர், தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில் குருவிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார். அதே பதவிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கமலா என்பவரின் கணவர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றிமாறன் மனுவை ஏற்காமல் நிராகரிக்கச் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
அதனையடுத்து, கடந்த 27-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலீன் வீட்டு முன்பு வெற்றிமாறன், திடீரென தான் மறைந்து வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அவருக்கு 40 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்த நபரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.