நரபலி கொடுக்க மந்திரவாதியுடன் வீட்டுக்கு வந்த கணவன்; அதிர்ந்து போன மனைவி!

மகாராஷ்டிராவில் புதையலுக்காக மனைவியையே நரபலி கொடுக்க முயன்ற கணவன், பெண் மந்திரவாதியுடன் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்திலுள்ள டோன்காவ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். அவரது மனைவி மீனா. குடிப்பழக்கமுள்ள சந்தோஷ், எப்போதும் சுடுகாட்டில் சுற்றிக்கொண்டிருப்பார் என்கிறார்கள். அதோடு, தனது மனைவியிடம் விரைவில் எனக்குப் புதையல் கிடைக்கவிருக்கிறது என்று தெரிவித்து வந்திருக்கிறார். கடந்த 22-ம் தேதி சந்தோஷ், பெண் மந்திரவாதி ஒருவரைத் தனது வீட்டுக்கு அழைத்துவந்தார். அந்தப் பெண் மந்திரவாதி சந்தோஷ் வீட்டில் சில பூஜைகள் செய்தார். பூஜையின்போது சந்தோஷிடம் நரபலி கொடுக்க வேண்டும் என்று பெண் மந்திரவாதி தெரிவித்தார். யாரை நரபலி கொடுப்பது என்று நினைத்த சந்தோஷ், தனது மனைவியையே நரபலி கொடுக்க முடிவு செய்தார். இது குறித்து தனது மனைவியிடம், “ புதையலைக் கண்டுபிடிக்க உன்னை நரபலி கொடுக்கப்போகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அதோடு சந்தோஷ் தனது மனைவிக்கும் சில பூஜைகள் செய்துள்ளார் அதிர்ச்சியடைந்த மனைவி மீனா இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். உடனே சந்தோஷ் தனது மனைவியை அடித்து உதைத்திருக்கிறார். உடனடியாக மீனா, அக்கிராமத்திலுள்ள சிலரிடம் தனது கணவனின் செயல் குறித்து தெரிவித்திருக்கிறார். கிராம மக்கள் மற்றும் தன்னுடைய தந்தை ஆகியோரின் துணையோடு தன் கணவன், பெண் மந்திரவாதிக்கு எதிராக போலீஸில் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து போலீஸார் நரபலி தடுப்புச் சட்டம், பில்லி சூனிய தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்தோஷ், பெண் மந்திரவாதி, சந்தோஷின் உறவினர் ஜீவன் ஆகியோரைக் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் மந்திரவாதியிடம் இதற்கு முன்பு யாரையாவது அவர் நரபலி கொடுத்து இருக்கிறாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Exit mobile version