தனியார் மருத்துவ கல்லூரிகளில் நி்ர்வாக இடங்கள் தமிழக மாணவர்களுக்கே வழங்க வேண்டும்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்.
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மாணவர்களுக்கே வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ படிப்புகள் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்விக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ள போதிலும், அதன் பயன்களை தமிழ்நாட்டு மாணவர்கள் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் பெரும்பாலானவை பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுவதுதான் இதற்குக் காரணம்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்பை பொறுத்தவரை அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் 15 சதவீத இடங்களைத் தவிர மீதமுள்ள அனைத்து இடங்களும் தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் நிரப்பப்படும். நிர்வாக ஒதுக்கீடு தமிழ்நாட்டிலுள்ள 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 520 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும், 220 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 520 இடங்களில் 70%, அதாவது சுமார் 370 இடங்கள் பிற மாநில மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. இது பெரும் சமூக அநீதியாகும்.
கர்நாடகம், கேரளத்திலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 85 விழுக்காடு உள்ளூர் மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படுகிறது. வெளிமாநில மாணவர்களுக்கு 15% இடங்கள் மட்டும்தான் வழங்கப்படுகின்றன.
எனவே, தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் உள்ளூர் மாணவர்களைக் கொண்டே நிரப்பும் வகையில் விதிகளில் மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.