புதிய கல்விக்கொள்கை பள்ளிக்கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்தும்

இந்திய பள்ளிகளின் கல்வியை புதிய கல்விக்கொள்கை உலகத்தரத்திற்கு உயர்த்தும் என்று தமிழக பா.ஜ.க. நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தியப் பள்ளிகளின் கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்தும், மிகச் சிறந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவை வலிமையான அறிவாற்றல் மிக்க சமுதாயமாக, உலக அளவில் அறிவாற்றலில் சிறந்த சக்தியாக மாற்றும் நோக்கத்துடன், தேவைக்குரிய மாற்றங்கள் செய்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மையை, திறமையை வெளிக்கொணரும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நம் மாணவர்கள் போட்டி போடுவதற்கு, இப்புதிய கல்விக் கொள்கை அடிப்படையாக அமைவது உறுதி.

ஏழை, பணக்காரர், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள பாகுபாடுகள், இப்புதிய கல்விக் கொள்கையால் முற்றிலும் மறைந்துவிடும். புதிய கல்விக் கொள்கை 2020, எந்தக் குழந்தையும் சமூக சூழ்நிலை காரணமாகவோ அல்லது பின்புலம் காரணமாகவோ, கல்வி கற்பதில் சிறந்து விளங்கும் எந்த வாய்ப்பையும் இழந்து விடக் கூடாது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. மாணவர்களின் எதிர்காலத்துக்கானது. அவர்கள் வாழ்வில் ஒளி வீசச் செய்திடப்போவது. புதிய கல்விக் கொள்கை பற்றி விமர்சிக்க முன் வருபவர்கள் அதை முழுமையாகப் படித்து உணர வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version