குதிரையின் பிறந்தநாளுக்கு 22.5 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய உரிமையாளர் வைரலாக பரவி வருகிறது.
சஹர்சா மாவட்டத்தில் பஞ்சவதி சவுக்கில் வசிக்கும் ரஜ்னீஷ் குமார் என்கிற கோலு யாதவ் தனது குதிரை சேடக்கின் இரண்டாவது பிறந்த நாளை கடந்த திங்கள்கிழமை மாலை கொண்டாடினார். கோலு தனது சொந்த குழந்தையைப் போலவே சேடக்கையும் நேசிக்கிறார். திங்கள்கிழமை காலை, சேடக்கை குளிப்பாட்டி மாலையில் சேடக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக குதிரை அட்டகாசமாக அலங்கரித்துள்ளார்.
சேடக் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் அதை ஒரு விலங்காக அழைக்கவோ நினைக்கவோ தனக்கு மனமில்லை என்று கோலு கூறினார். சேடக்கின் முதல் பிறந்தநாளும் இதேபோன்று தான் கொண்டாடப்பட்டது என்று அவர் கூறினார். கேக், சேடக்கின் முன் வைக்கப்பட்டது. கேக் மீது குதிரையின் படம் மற்றும் குதிரையின் பெயரான ‘சேடக்’ என்று எழுதப்பட்டிருந்தது. பின்னர், கோலுவால் கேக் வெட்டப்பட்டு பட்டாசு வெடித்து அமர்க்களமாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோலுவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஏராளமான மக்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோலு தனது பிறந்தநாளை இதுவரை கொண்டாடியதில்லை, ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சேடக்கின் பிறந்த நாளை மட்டும் தவறாமல் கொண்டாடுகிறார். சேடக்கிற்கு ஆறு மாதம் இருக்கும்போதே சேடக்கை கோலு, தனது வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், ஆரம்பத்தில் குதிரை குட்டிக்கு பால் மட்டுமே தந்து வளர்த்ததாகவும் அவர் கூறினார். கோலு, “நான் என் சொந்த குழந்தையைப் போலவே சேடக்கையும் வளர்த்தேன். எனது சொந்த குழந்தைகளை விட அவருக்கு அதிக அன்பு கொடுத்திருக்கிறேன்.” என்று கூறினார். இந்த பிறந்தநாள் விருந்தில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டன என்று கோலு கூறினார்.
விலங்குகளுக்கு எதிரான வன்முறை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய கோலு, இன்று விலங்குகள் மனிதர்களை விட விசுவாசமாக இருக்கின்றன என்று கூறுகிறார். கோலு யாதவ் ஒரு மிருகத்தை ஒருவர் வளர்க்கிறார் என்றால் ஒருபோதும் அவர் அதை ஒரு மிருகமாக கருதக்கூடாது, அதை அவரது குடும்ப உறுப்பினராக கருத வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். விலங்குகளை நேசிக்குமாறும் மக்களுக்கு ஒரு செய்தியையும் அவர் கூறியுள்ளார்.