துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென சந்தித்தது ஏன் என்று முன்னாள் எம்.பி. வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்று வரும் 7-ந் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் பங்கேற்ற பிறகு, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர கூறியதாவது:-
ஆலோசனை ஏன்?
இது தனிப்பட்ட சந்திப்பு. கே.பி.முனுசாமியும் தனிப்பட்ட ரீதியில் துணை முதல்வரைச் சந்தித்துள்ளார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இல்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக். 7-ம் தேதி பார்த்துக்கொள்ளலாம்.
குழப்பம் இல்லை
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைப்பதற்குத்தான் என்னுடைய ஆதரவு. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உறுதுணையாக இருப்பேன். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவருக்கும் ஆதரவாக இருப்பேன். அ.தி.மு.க. ஆட்சியில் எந்தக் குழப்பமும் இல்லை. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.