பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 102 சவரன் தங்கம் ஏமாற்றிய பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நீலாங்கரை அடுத்த பாலவாக்கம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரின் வீட்டின் முன் வீட்டில் வசித்து வரும் நாராயணி என்பவர் எப்போதும் புலம்பியவரே இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த சிவகுமார் இவர் எதற்காக எப்போதும் புலம்பியவரே இருக்கின்றார் என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்தியுள்ளார்.
இதனை அவரிடமே ஒரு நாள் கேட்டபோது அதற்கு நாராயணி உனது வீட்டில் ஏவல், பில்லி, சூனியம் வைக்கப்பட்டுள்ளது. இதை அப்படியே விட்டால் உயிர் பலி வாங்கும். எனவே, இதை போக்க, வீட்டில் உள்ள நகை, பணத்தை வைத்து 45 நாள் பரிகாரம் செய்ய வேண்டும், என்று கூறியுள்ளார். இதனை முழுவதுமாக நம்பிய சிவகுமார் தன் வீட்டிலுள்ள 102 சவரன் நகையையும் மொத்தம் 8 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் நாராயணியிடம் அளித்துள்ளார்.
பின்னர் 45 நாட்கள் கழித்து தனது நகை மற்றும் பணத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு நாராயணி இன்னும் 365 வைத்து பூஜை செய்தால்தான் இந்த தோஷம் நீங்கும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமார் தன் நகை மற்றும் பணத்தை திரும்ப தருமாறு அடிக்கடி அவரை கேட்க ஆரம்பித்துள்ளார். இதனால் நாராயணி சற்றென்று தலைமறைவானார்.
இதுகுறித்து நீலாங்கரை போலீசில் சிவகுமார் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து நாராயணியை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரும்பாக்கத்தில் பதுங்கி இருந்த நாராயணியை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.