திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரம் விமானச் சேவை நிறுத்தம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயிலின் ஆராட்டு ஊர்வலத்தையொட்டி, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (அக்டோபர் 20) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.

கோயிலின் பாரம்பரிய ‘அல்பசி ஆராட்டு’ ஊர்வலம் விமான நிலைய ஓடுபாதையைக் கடந்து செல்ல வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகமான திருவனந்தபுரம் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகள் கவனிக்க வேண்டியது என்ன?

இன்று திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் மற்றும் அங்கு வந்தடையும் விமானங்களில் பயணம் செய்வோர், தங்களது விமானத்தின் திருத்தப்பட்ட நேரத்தைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் பயணம் திட்டமிட்டுள்ளவர்கள், விமான நிலையத்துக்குப் புறப்படுவதற்கு முன்பாக விமான நிறுவனத்தின் இணையதளம், செயலி அல்லது குறுஞ்செய்தி அறிவிப்புகளைச் சரிபார்ப்பது அவசியம். மாற்றப்பட்ட புறப்பாட்டு நேரத்துக்கு ஏற்ப செக்-இன் மற்றும் விமான நிலையப் பயணத்தைத் திட்டமிட வேண்டும்.

ஓடுபாதை வழியாகச் செல்லும் கோயில் ஊர்வலம்

பத்மநாபசுவாமி கோயிலிலிருந்து புறப்படும் ஆராட்டு ஊர்வலம், விமான நிலைய ஓடுபாதையைக் கடந்து சங்குமுகம் கடற்கரையைச் சென்றடையும். அங்கு சுவாமி விக்கிரகங்களுக்குப் புனித நீராட்டு நடைபெறும்.

இந்தப் பாரம்பரியம், 1932-ஆம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு முன்பிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கோயிலின் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் ஆராட்டு ஊர்வலங்களுக்காக விமான இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, விமான நேரங்கள் மாற்றியமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

Exit mobile version