திருவாரூர் நகராட்சி பகுதியில் 74 குளங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றில் ஏராளமான குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தற்போதும் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது.
பெரும்பாலான குளங்களின் நீர் வழி் பாதைகள் ஆக்கிரமிப்பு காரர்களால் அடைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் திருவாரூர் நகராட்சி 25-வது வார்டு பகுதியில் பயன்பாட்டில் இருந்த செட்டிகுளத்தை காணவில்லை என கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காணாமல் போன குளத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மீண்டும் திருவாரூர் நகர் பகுதிகளில் ‘குளத்தை காணவில்லை’ என போஸ்டர் அடித்து அந்த பகுதி மக்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் செட்டிகுளம் இருந்து வந்ததுள்ளது என்றும். இதன் மூலமாக இந்த பகுதி மக்கள் குளிப்பதற்கு மட்டுமன்றி குடிநீர் ஆதாரமாகவும் இந்த குளத்தை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு முழுவதுமாக பொது பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடனடியாக நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு மீண்டும் அந்த இடத்தில் குளத்தை உருவாக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோன்று திருவாரூர் நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை மீட்டெடுத்து நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.