புதுச்சேரியில் பொது இடங்களில் நடமாடும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ஆவணங்கள் இன்று முதல் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதனால்,அரசு சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகமும் தங்கள் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன்மூலம்,தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து,இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.அதன்படி,மகாராஷ்டிரா 18 பேருக்கும், ராஜஸ்தானில் 9 பேருக்கும், டெல்லியில் 2 பேருக்கும், குஜராத்தில் 3 பேருக்கும், கர்நாடகாவில் 3 பேருக்கும்,சண்டிகரில் ஒருவருக்கும்,ஆந்திராவில் ஒருவருக்கும்,கேரளாவில் 1 -க்கும் என மொத்தம் 38 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உருமாறிய தொற்றினால் பாதிப்புகள் பெரியளவில் இல்லை எனினும் அதிவேகமாக பரவும் ஒன்றாக உள்ளது.
இதனையடுத்து,சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,புதுச்சேரி முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ஆவணங்கள் இன்று முதல் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,பொது இடங்களுக்கு செல்பவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.