மினி வேனில் கடத்திய 3 டன் குட்கா பறிமுதல்…

மினி வேனில் மூன்று டன் குட்கா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

துரைப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நிலையில். சிலர் பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மினி வேன் மூலம் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக அடையார் துணை கமிஷனர் விக்ரமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் துரைப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 மினி வேனை கவனித்தனர். பின்னர் அந்த வேனை சோதனை செய்தனர். அதில் 3 டன் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனால் வேனிலிருந்த 3 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த அருண், பிரபாகரன், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த நரேந்திரன் ஆகியோர் என தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 3 டன் குட்கா, 2 மினி வேன் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அதனை தொடர்ந்து எஸ்பிளனேடு போலீசார் நேற்று முன்தினம் உயர்நீதிமன்றம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்ததில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த நாசர், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version