டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு இன்று நடைபெறுவதையொட்டி 2,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
குரூப்-4 பதவிகளில் (விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட) காலியாக உள்ள 7,301 பணியிடங்களுக்கான தேர்வை 22,02,942 பேர் எழுதவுள்ளனர். இந்த தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வர்கள் காலை 8:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும். 9 மணிக்கு ஓஎம்ஆர் விடைத்தாள்கள் வழங்கப்படும். 9 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் , தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் எளிதாக வந்து செல்லும் விதமாக, சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கமாக இயக்கும் பேருந்துகளை விட கூடுதலாக 2,000 பேருந்துகள் இயக்கப்படுகிறது.இந்த பேருந்துகளில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு என ’ஸ்டிக்கர்’ ஒட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.