தொப்பி வாப்பா பிரியாணி கடையின் 9வது கிளை சென்னை தியாகராய நகரில் திறக்கப்பட்டது.
தமிழ் பெயர் வைத்திருந்தால் பிரியாணி, வேட்டி கட்டி வந்தால் பிரியாணி என எதிலும் வித்தியாசமான அறிவிப்புகளை வெளியிடும் தொப்பி வாப்பா பிரியாணி கடை, அதன் 9வது கிளை திறப்பிலும் வித்தியாசத்தை கடைப்பிடித்துள்ளது.
எப்பொழுதும், தொப்பி வாப்பா நிர்வாகத்தினர் சமூக அக்கறையுள்ள நபர்களை வைத்து கடைத்திறப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நமக்காக போராடும் துப்புரவுப் பணியாளர்களை வைத்து கடையை திறந்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுத் தொடர்பாக தொப்பி வாப்பா பிரியாணி கடையின் நிறுவனர் உமர் முக்தரை தொடர்பு கொண்டோம்.
“அங்கீகாரம் மறுக்கப்படும் விளிம்பு நிலையில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் தான் இன்று நம் சிறப்பு விருந்தினர்கள். இந்த சமூகத்தில் நாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் தூய்மைப் பணியாளர்கள்.இங்கு உயர்ந்தவன் என்பது பிறப்பால் இல்லை உழைப்பால் என்பதை என்றைக்குமே ஆழமாக வலியுறுத்த வேண்டியது அனைத்து இளைஞர்களின் கடமை என்பதை நாம் நம்புகிறோம். எனவே எங்களைப் பொருத்தவரை தமிழ் சமூகத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களில் தூய்மைப் பணியாளர்களும் உள்ளனர்” என்றார்.
2018ம் ஆண்டு ஸ்டார்ட் அப். இன்று பலர் பாராட்டும் அளவிற்கு உயர்ந்து, 9வது கிளையை தியாகராய நகரில் திறந்துள்ளனர், தொப்பி வாப்பா நிர்வாகத்தினர்.
என்ன செய்ய போகிறோம் என்ற தெளிவான புரிதல், உழைக்கும் திறன், விடாமுயற்சி இருந்தால் போதும், 2 ஆண்டுகளில் வேர் விருட்சமாக வளரும் என்பதற்கு உதாரணம் இவர்கள். யார்கிட்டயும் வேலைக்காக நிற்கக்கூடாது. எதையாவது செய்து சாதிக்கணும் என நினைக்கும் இளைஞர்களுக்கு இவர்கள் ஒரு எனர்ஜி டானிக்.
படித்தால் இந்த வேலை தான் செய்யணுங்கிற அர்த்தம் இல்லை. எந்த வேலையும் செய்து சாதிக்கலாம் என்பது தான் இவர்களது வெற்றிக்கான சூத்திரம்.
படிக்கும் போது எதை இந்த சமூகத்துக்கு செய்ய வேண்டும் என நினைத்தார்களோ, அதை இன்றும் தொடர்கின்றனர். கல்லூரி காலத்தில் போராட்டத்துக்கு குரல் கொடுத்த போது, உணவில்லாமல் தவித்த இளைஞர்கள் ஒவ்வொருவரின் வயிற்றுப்பசியை உணர்ந்ததால், இன்றும் பிறருக்கு உதவுவதை சத்தமில்லாமல் செய்து வருகின்றனர், தொப்பி வாப்பா நிர்வாகத்தினர்.
வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடிக்கும் இவர்கள் அடி எடுத்து வைக்க உதவிய தோழமைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து கவுரவித்துள்ளனர். அவர்களது ஒவ்வொரு அடியிலும் வழி நடத்தியவர்களது ஐடியாக்கள் பக்கபலமாக உள்ளன. அது தான் இன்று தனக்கான பாதையை நோக்கி அவர்கள பயணிக்க உதவியுள்ளது.