ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அபிராமம் அருகே உள்ள அச்சங்குளத்தில் வசித்து வருபவர் பாண்டி. இவரது மனைவி ராதிகா, அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கமுதி கோட்டைமேட்டில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு சம்பவதினத்தன்று பாண்டி சென்றுள்ளார். வீட்டிற்க்கு வருவதற்குள் அதிக நேரம் ஆனதால் அருகில் உள்ள ஒரு உணவகத்தில் அவர் புரோட்டா மற்றும் கோழிக்கறி சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற அவர் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக பாண்டியை அபிராமம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து முதலுதவி செய்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு பாண்டியை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாண்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பாண்டியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அபிராமம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பாண்டியிம் உயிரிழப்பிற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.