தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வத்தின் மருமகன் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வத்தின் மருமகன் துளசிராமன். துளசிராமனின் மகன், பூந்தமல்லியை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரி ஒன்றில், விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.
கோடம்பாக்கத்தில் வசித்து வரும் துளசிராமன், தனது மகனைப் பார்ப்பதற்காக, கோடம்பாக்கத்தில் இருந்து வேலப்பன்சாவடிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். நேற்று இரவு தனது மகனை பார்த்துவிட்டு வீட்டிற்க்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்ள்ளது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக துளசிராமன் சென்ற இருசக்கர வாகனம் காரின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார்.
உடனே காரில் இருந்தவர்கள், துளசிராமனை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்து விட்டுச் சென்றுள்ளனர். அங்குத் துளசிராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதுக்குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, இறந்துப்போனது எம்.எல்.ஏ., கு.க.செல்வத்தின் மருமகன் என்பது தெரியவந்தது. மேலும், மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தப்பிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.