அம்மா இறந்ததால் சோகம்; 20 வயது இளைஞர் கூவம் ஆற்றில் குதித்துத் தற்கொலை!

சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் தாயார் இறந்த சோகத்தில் கூவம் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீரிம்ஸ் சாலை அருகில் உள்ள காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் என்கிற போவாஸ் (20) இவர் தனது அம்மாவோடு வசித்து வந்தார். சதிஷ்குமாரின் தாயார் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காலமானார். தனது தாயின் மீது அளவுகடந்த பாசம் கொண்ட சதீஷ் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று மதியம் ஒரு மணி அளவில் சதிஷ்குமார் தற்கொலை செய்துகொள்ளத் தனது பகுதி அருகே உள்ள கூவம் ஆற்றில் இறங்கியுள்ளார். இளைஞர் ஆற்றில் இறங்குவதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் சதிஷ்குமாரை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், படகு மூலம் சதிஷ்குமாரின் உடலை தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தாயை இழந்த சோகத்தில் இளைஞர் ஒருவர் கூவம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version