தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள ராஜபாளையம் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த குப்பைத்தொட்டியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கவருடன் கிடந்தன. அந்த ஆதார் அட்டைகள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக தபால் அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில் இருந்தன.
இதைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அந்த ஆதார் அட்டைகளை மீட்டு அங்கு இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தபால்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்
கடந்த மாதம் ஒரு தபால் பை காணாமல் போய் உள்ளது என்றும் . அதில் உள்ள தபால்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த ஆதார் கார்டு தபால்களை அதிகாரிகள் பெற்று ஆய்வு செய்தனர். அதில் தபால் பை காணாமல் போனதற்கு முன்பு உள்ள தேதி இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அதிகாரிகள் அந்த தபால்களை பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மேலும், அந்த தபால்களை குப்பைத்தொட்டியில் போட்டவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டிய ஆதார் அட்டைகள் குப்பைத் தொட்டியில் கிடந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.