யுபிஎஸ்சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துக- சென்னை உயர் நீதிமன்றம்

யுபிஎஸ்சி தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்தக்கோரிய வழக்கில் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான சிவில் சர்விஸ் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் வழக்கமாக இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், எந்த மாநிலத்திலும் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது என்பதாலேயே இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, யுபிஎஸ்சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரிய வழக்கில் 8 வாரங்களில் பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க மத்திய உள்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version