உத்தரகண்ட் மாநிலத்தில் பேரிடர் நிலைமை குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி.
டெல்லி, கிழக்கில் கேரளம் என்றால் மேற்கில் உத்தரகண்ட் மாநிலம் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு வானிலை ஆய்வு மையம் இன்றும் ரெட் அலார்ட் விடுத்துள்ளது. கனமழை, நிலச்சரிவு, வெள்ளம் என மாநிலத்தை புரட்டி போட்டுள்ளது பெருமழை. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாநிலத்தின் 65% சாலைகள் நிலச்சரிவும், நீர் சூழ்ந்தும் காணப்படுகிறது என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவில் ஏற்பட்டுள்ள நிலசரிவில் பல வீடுகள் சிக்கியுள்ளது; மீட்பு குழு செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது என தேசிய பேரிடர் குழுக்கள் தெரிவிக்கிறது.
பவுரி, லான்ஸ் டவுனில் நேபாள குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நிலச்சரிவில் சிக்கி இறந்ததாகக் கூறப்படுகிறது;மேலும் சம்பாவாட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலசரிவில் சிக்கி 2 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். 72 மணி நேரமாக பெய்து வரும் கனமழை மாநிலத்தில் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, கோசி நதி உள்ளிட்ட பெரும்பாலான நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்புப்பணிகளை தொடருவத்திலும் சிக்கல் இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாநிலத்தின் நிலைமை குறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மற்றும் அமைச்சர் அஜய் பாட்-யிடம் தொலைபேசி வாயிலாக அழைத்து பிரதமர் நரேந்திரமோடி கேட்டறிந்தார். அப்போது, மாநிலத்தின் மீட்புப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என கூறியுள்ளார்.