பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த தொடர் ஓட்டப் பந்தயத்தில், மாணவர்கள் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, குறுக்கே வந்த நாய், அவர்களை விட வேகமாக ஓடி, வெற்றிக் கோட்டை அடைந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வேடிக்கைகளை விரும்பும் நாய்கள், நமது செயல்களில் அடிக்கடி குறுக்கிடும் என்பது அனைவருக்கும் தெரியும். அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயத்தில், நாய் ஒன்று குறுக்கிட்டு ஓடும் வீடியோ, கேமராவில் சிக்க, அது நெட்டிசன்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அமெரிக்காவிலுள்ள உட்டா நகரில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்கள் டிராக்கில், ரிலே ரேஸ் ஓடுகின்றனர். அதில் கிரேசி லானி என்பவர், வெற்றி இலக்கை நோக்கி வேகமாக முன்னேற, குறுக்கே வந்திருக்கிறது ஹோலி என்ற நாய் ஒன்று. திடீரென டிராக்குக்குள் புகுந்த நாய், அனைவரையும் விட வேகமாக ஓட ஆரம்பித்திருக்கிறது. வெற்றி பெறவிருந்த கிரேசி லானியையும் முந்திய அந்த நாய், முதல் நபராக வெற்றி இலக்கை அடைந்தது. இது அங்கு சுற்றியிருந்த மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. அனைவரும் சிரித்தபடி, கைதட்டி ரசித்தனர்.
நாய் வேகமாக ஓடிய போது, அங்கு பந்தயத்தில் கலந்து கொண்ட மாணவிகள் காயம் அடைந்திருக்கலாம். நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. கிரேசி லானே மற்றும் அவரது அணி வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டாலும், கிரேசிக்கு முன்பே வெற்றி கோட்டைக் கடந்த ஹோலி தானே உண்மையான வெற்றியாளர்! இந்த வீடியோ நெட்டிசன்களை கவர, அது வைரலாக பரவி வருகிறது.