11 அங்குல உயரத்தில் உருவான சந்தன விநாயகர் சிலை!!

சென்னை விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி 11 அங்குல உயரத்தில் சந்தன மரத்தில் நர்த்தன விநாயகர் சிலையை திருமழிசையைச் சேர்ந்த விருது பெற்ற சிற்பக் கலைஞர் டி.கே. பரணி உருவாக்கியுள்ளார்.

11 அங்குல உயரம், 7 அங்குல அகலம், 3 அங்குல தடிமனில் இந்த சிலை வெகு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தாமரை மலரை யானை தாங்கி நிற்க அதன்மேல் நின்று விநாயகர் நடனமாடுவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையைச் சுற்றி விநாயகரின் வாகனமான எலிகள் இசைக் கருவிகளைக் கொண்டு இசையமைப்பது போன்று சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நுண்ணிய, அதிஅற்புதமான வேலைப்பாடுகளுடன் சிலை எழிலுற அமைந்துள்ளது.இந்த சிலையை உருவாக்க சிற்பி டி.கே.பரணிக்கு 3 மாதங்கள் ஆகியுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையைச் சேர்ந்த டி.கே.பரணி, நுண்ணிய சிற்பத்தை உருவாக்கியதற்காக குடியரசுத் தலைவரின் தேசிய விருதைப் பெற்றவர்.

அதுமட்டுமல்லாமல் மாநில அரசின் விருதுகள், விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்டின் விருதுகள், கிராப்ட்ஸ் எம்போரியத்தின் விருதுகளைப் பெற்றுள்ளார்.

Exit mobile version