விழுப்புரம் மாணவி தாக்கப்பட்ட சம்பவம் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விழுப்புரம் மாவட்டத்தில் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்த பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர்‌ அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து நடந்த சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் பகுதிக்கு உள்பட்ட தி.பரங்கினி என்ற கிராமத்தில் வசித்துவரும் விவசாய கூலி தொழிலாளி முனியாண்டி என்பவரது மகள் தனலட்சுமி. பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர் 12ஆம் வகுப்பை  முடித்துவிட்டு, தனது மேற்படிப்புக்காக  கல்லூரிகளில் விண்ணப்பிக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால், மேற்கொண்டு அவரது படிப்பைத் தொடர முடியவில்லை.

தனக்குச் சாதி சான்றிதழ் ‌வழங்கக் கோரி‌ தொடர்ந்து முயற்சித்தும், இதுவரை சான்றிதழ் கிடைக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மாணவியின் சாதி சான்றிதழ் குறித்து ஆய்வு செய்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தினர், மாணவி இருளர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்று கூறி அவருக்குச் சான்றிதழ் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினர் என்கிறார்கள் இந்த மாணவியின் குடும்பத்தினர்.

இதையடுத்து மாணவிக்கும் மற்றும் கிராமத்தினர் சிலருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து எதிர்த்தரப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் மாணவியை  தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவி கூறுகையில், “எனக்குச் சாதி சான்றிதழ் வழங்கக்கூடாது என்றும் அப்படி வழங்கினால் எம்பிசி (MBC) என்று தான் வழங்க வேண்டும் என்றும் கூறியவர்களிடம், அப்படியென்றால் எங்கள் வீட்டில் திருமணத்திற்குப் பெண்‌ எடுப்பீர்களா என்று நான் கேட்டேன். அதற்கு அங்கிருந்த நபர் ஒருவர் உனக்கு அவ்வளவு திமிரா என்று கூறியபடி, என் தலையில் தட்டி என் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டார். இதை  பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். இந்த சம்பவம் எனக்கு மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது” என்று மாணவி தனலட்சுமி கூறுகிறார்.

இதனையடுத்து தன்னை தாக்கியவர்கள் மீது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்திய காவல்துறையினர் குற்றஞ்சாட்டப்பட்ட பெருமாள், ஏழுமலை, துரைக்கண்ணு மற்றும் கோபால் ஆகிய நான்கு பேர் மீது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

இதனிடையே மாணவி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version