கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு பரிசோதனையில் பங்கேற்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 17 மையங்களில் 1600 பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தாகிய கோவிஷீல்டு பரிசோதனை நடத்தப்பட உள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் 160 பேருக்கும், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 140 பேருக்கும் கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த சோதனைகளில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தன்னார்வலர்களுக்கு அழைப்பு.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனைக்காக 160 தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் பரிசோதனைக்கு முன்வரலாம்.
பரிசோதனைக்கு வருபவர்களுக்கு காப்பீடு செய்யப்படும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வீட்டுக்கு செல்லலாம். நிறுவனங்களுக்கு சென்று வேலையும் பார்க்கலாம். பரிசோதனைக்கு விருப்பம் உள்ளவர்கள் 78068 45198 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.