பள்ளிகளை நோக்கி துள்ளிவரும் பிள்ளைகளை வருக வருகவென வரவேற்கிறேன்… முதலமைச்சர் மகிழ்ச்சி

நீண்டகால இடைவெளிக்கு பிறகு பள்ளிகளுக்கு வரும் குழந்தைகைளை வருக வருக என வரவேற்கிறேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நவம்பர்-1 முதல் ஒன்று முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படவிருக்கின்றன

இந்த நிலையில், நவ.1ஆம் தேதி மீண்டும் பள்ளிக்கு வரும் குழந்தைகளை அன்புடன் வரவேற்போம் என்றும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதன் மூலமாக எதிர்கால மனித ஆற்றலை உருவாக்குவோம் எனவும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணவர்களை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளிகளுக்குச் சென்று வரவேற்க வேண்டும். விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதை போல மாணவர்களை வரவேற்பு கொடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். பள்ளிகளை நோக்கி துள்ளிவரும் பிள்ளைகள் அனைவரையும் வருக, வருக என நான் வரவேற்கிறேன். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் இரு வாரங்களுக்கு பாடங்களை நடத்தாமல் மாணவர்களுக்கு உற்சாகமூட்ட கதை, பாடல், விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நம்பிக்கையுடன் கல்வி சாலைக்குள் உங்களை நீங்கள் ஒப்படைத்து கொள்ளுங்கள் என்றும் இருண்ட கொரோனா காலம் முடிந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை மாணவர்கள் தொடங்க உள்ளனர் எனவும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Exit mobile version