நாடு முழுவதும் 8,70,141 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
டெல்லி,
எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துள்ளதா? என்றும் எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு மானியங்களை ஏதும் வழங்குகிறதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி,
எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆக குறைத்து உள்ளதாகவும், அதேபோல சார்ஜிங் ஸ்டேஷன்களில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி-ன் அளவு 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டு உள்ளதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் 8,70,141 எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும், தமிழகத்தைப் பொருத்தவரையில் 44,817 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2,55,700 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக மத்திய அரசினுடைய பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.