கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை தொடர்ந்து மாணவ, மாணவிகளிடம் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் நோட்டீஸ் ஒட்டப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை உக்கடத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் மாணவி அந்த ஆசிரியர் குறித்து பாலியல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் எனவும், மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர் அறை முன்பு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ் ஒட்டப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வு நோட்டீஸ் ஓட்டுவதற்கான நடவடிக்கையில் அந்தந்த பகுதி போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
அதில் போக்சோ என்றால் என்ன? அந்தக் குற்றத்திற்கு கிடைக்கும் தண்டனை, மாணவிகள் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது குறித்த வாசகங்கள் மற்றும் அறிவுரைகள் இடம் பெற்றிருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.