சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) புரட்டாசி மாத பூஜை நிறைவடைகிறது. மேலும் கோவிலில் பக்தர்களை எப்போது அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக கேரள அரசு வருகிற 28-ந் தேதி ஆலோசனை நடத்துகிறது.

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி திறக்கப்பட்டது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து கோவில் ஊழியர்கள், போலீசார் ஆகியோருக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. மற்ற பூஜைகள் நடைபெறவில்லை.
மறுநாள் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் தினசரி பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் புரட்டாசி மாத பூஜை இன்று நிறைவு பெறுகிறது. இன்று ஏழு மணி அளவில் நடை சாத்தப்படுகிறது. இந்த புரட்டாசி மத பூஜையில் யாராலும் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த கொரோன நோய் தொற்றை கருத்தில் கொண்டு கேரளா அரசு பக்தர்கள், பொதுமக்கள் யாரையும் புரட்டாசி மாத பூஜையில் அனுமதிக்கவில்லை.
இதோடு சபரிமலை கோவில் ஐப்பசி மாதம் 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 17 -ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த முறையாவது பக்தர்கள் முன்பதிவு செய்து வந்து ஐயப்பனை தரிசிக்கலாம் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனை நடத்தி வருகிறது. மண்டல பூஜைக்கு முன்பாக ஐப்பசி மாதத்தில் பக்தர்களை அனுமதித்து முன்னோட்டம் காணலாமா? என வருகிற 28-ந் தேதி அரசு ஆலோசனை நடத்த உள்ளதாக மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
என்னதான் பக்கதர்களை அனுமதிப்பது பற்றி கோவில் தேவசதம் போர்டு ஆலோசித்து வந்தாலும் இறுதி முடிவு கேரளா அரசிற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.