நம் நாட்டுக் கலாச்சாரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கோலம் போடுவது என்பது தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்ற ஒரு பழக்கமாகும். நான் சிறுபிள்ளையாக இருக்கும் போதிலிருந்தே எங்கள் வீட்டின் வாசலில் தினமும் கண்டிப்பாக கோலம் இருக்கும். அதுவும் பொங்கல், தீபாவளி என்று ஒவ்வொரு பண்டிகையிலும், அந்தப் பண்டிகைக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு வகையான கோலங்கள் வீட்டினை அலங்கரிக்கும்.
அதுமட்டுமில்லாமல் நம் வீட்டில் திருமணம், வளைபாப்பு, புதுமனைப் புகுவிழாவென அனைத்து நிகழ்ச்சிகளையும் நாம் வரைகின்ற கோலங்கள் வண்ணமயமாக்குகிறது. ஆனால் கோலம் போடுவது எதற்காக என்று நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்..
வீட்டில் அழுக்குக்கிருமிகள் அண்டாமலிருக்கும்!!
கோலம் என்பது எல்லோருடைய வீட்டின் முன்பும் போடக்கூடிய ஒன்றாகும். அது ஏனென்று கேட்டால் வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழையும் நபர்கள் நேரடியாக வீட்டிற்குள் நுழைந்தால் அவர்கள் காலில் உள்ள அழுக்கு மற்றும் கிருமிகள் வீட்டிற்குள் எளிதாக நுழைந்துவிடும். ஆனால் நம் வீட்டின் முன்பு கோலம் போட்டால், வெளியிலிருந்து வருபவர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு கோலத்தின் மேல் கால் வைத்துவிட்டு அதற்குப்பின் நம் வீட்டிற்குள் நுழைவதால், அவர்கள் காலில் உள்ள அழுக்கு மற்றும் கிருமிகள் கோலப்பொடியிலேயே ஒட்டிக் கொள்ளும். இதனால் நம் விட்டிற்குள் அழுக்கு மற்றும் கிருமிகள் கடத்தப்படும் வாய்ப்புகள் குறையும்.`
ஆனால் வீட்டின் முன்பு கோலங்கள் போடுவதே நம் வீட்றிற்கு வருபவர்கள் அதன்மீது மிதித்து வீட்டிற்குள் நுழைவதற்குத்தான் என்ற ஐதீகம் தெரியாமல் நிறைய சமயங்களில் நான் போட்ட கோலத்தின்மேல் கால் வைத்து அழித்ததற்காக என் அண்ணன், தங்கைகள் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தியுள்ளேன். இனிமேல் நான் போட்ட கோலத்தை யாரும் மிதித்தாலும் அதைப்பற்றி நாம் கவலைகொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
எறும்புகளுக்கு உணவு
பண்டைய காலத்தில் கோலமிடுவதற்காக அரிசி மற்றும் கோதுமையை அரைத்து அதிலிருந்து வரும் பொடியையே கோலப்பொடியாக எல்லோரும் பயன்படுத்தி வந்தனர்.ஏனென்றால் அரிசி மற்றும் கோதுமைத் துகள்களை எறும்பு மற்றும் பல சிறு உயிரினங்கள் சாப்பிடும் என்பதால் அவைகளுக்கு உணவளிப்பதற்காக கோலமிடும் வழக்கத்தை வைத்திருந்தனர்.ஆனால் காலப்போக்கில் கோலப்பொடியானது பல வேதிப் பொருட்கள் கலந்து உருவாக்கப்படுவதால் “கோலம் போடுவது “என்பது வீட்டுனை அழகுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒன்றாக இக்காலத்தில் மாறிவிட்டது. அதனால் அவைகள் எறும்புளுக்கு உணவாகாமல் விஷமாக மாறும் அபாயம் உள்ளது. அதனால் நாமும் இனிமேல் பழைய காலத்தைப்போல் அரிசி மாவில் கோலமிடும் பழக்கத்தையே பின்பற்றுவோம்
நேர்மறையான அதிர்வலைகளை உண்டாக்க?!
வீட்டின் முன்பு கோலம் போடுவதால் அவைகள் நம் மூளையில் ஒரு வகையான நேர்மறையான அதிர்வலைகளை ஏற்படுத்துமாம்.அதனால் அவைகள் நம் மனதிற்கு ஒரு விதமான மகிழ்ச்சியைத் தருமாம்.முந்தைய காலத்தில் எல்லோரும் வீட்டை சுத்தப்படுத்த பசுவின் சாணியைக் கரைத்து தரையில் தேய்ப்பார்கள். அப்படித் தேய்க்கும்போது தரையில் உண்டாகும் கோடுகள் ஒழுங்கற்றதாக இருக்கும். அதனால் அந்த ஒழுங்கற்ற கோடுகளைப் பார்ப்பதற்கே கொசகொசவென்று அசாதாரணமாக இருப்பதால் அவைகள் நம் மூளையில் ஒரு விதமான எதிர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்துமாம்.
அதனால் அந்த ஒழுங்கற்ற அதிர்வகளை சரிசெய்வதற்காகவே நம் முன்னோர்கள் சாணியை வைத்து வீட்டை மொழுகிவிட்டு, அதன் மேல் அழகான ஒழுங்கான கோடுகளாலான ரங்கோலிக் கோலங்களை வரைந்து, அதன்மூலம் சாணத்தைத் தேய்த்ததால் உண்டான எதிர்மறை அதிர்வலைகளை நேர்மறை அதிர்வலைகளாக மாற்றி நம் மூளைக்கு ஒருவிதமான புத்துணர்வை அழிக்கிறது என்பது அறிவியல்.
பெண்களின் கலை
உண்மையில் கோலம் போடுவது என்பது ஒரு கலையே! அனைத்துப் பெண்களாலும் அவ்வளவு எளிதாக கோலமிட முடியாது.சில பெண்களுக்கு கோலம் போடுவது என்பதே முடியாத ஒன்றாக இருக்கும். ஆனால் சில பெண்கள் கோலமிடுவதில் கில்லியாக இருப்பார்கள். சிற்பத்தை செதுக்குபவன் சிற்பி என்றால், சிவன், கிருஷ்ணன், மரங்கள், பொங்கல் பானை, கரும்பு, தாமரை, ரோஜா, மாடு, என அனைத்து உருவங்களையும் தன்னுடைய கோலங்களில் மிக அழகாக தத்ரூபமாக வரையும் அனைத்துப்பெண்களும் சிற்பிகளே! ஒரு சிற்பித் தன் சிற்பத்தை செதுக்குவதற்கு எவ்வளவு முயற்சி எடுக்கிறானோ, அதேபோல கோலமிடும் பெண்களும் தங்கள் கோலத்தை வண்ணமயமாக்கவும், தத்ரூபமான உருவங்களை தன் கோலங்களில் கொண்டு வருவதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உண்மையில் கோலமிடுதல் என்பதும் ஒரு மிகச்சிறந்த கலையே!