பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணின் தலையை துண்டித்து கொலை செய்த மர்மநபர்கள்…!

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் வெட்டிக் கொலை.

கடந்த 2012 ஜனவரி 10-ம் தேதி, திண்டுக்கல் அருகே நத்தவனப்பட்டியில், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 14 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கில் 5 ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இபி காலனியைச் சேர்ந்த நிர்மலாதேவி என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று காலை 10 மணிக்கு தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

நிர்மலா தேவி, திண்டுக்கல் இபி காலனி பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்றுகொண்டிருந்த போது இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. நிர்மலா தேவியின் தலையை துண்டித்த மர்ம நபர்கள், நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாடிக்கொம்பு போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version