அன்புள்ள மாமியார்களே……வணக்கம்…PCOD எனும் குணப்படுத்தக்கூடிய பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதியுறும் மருமகள்கள் சார்பாக பேசுகிறேன்..சிறிது செவிமடுங்கள் அன்னைகளே..
PCOD என்றால் என்ன?
இளம்பெண்களுக்கு ஏற்படும் சரிசெய்யக்கூடிய ஹார்மோன் குளறுபடி தான் இந்த PCOD.
இதை “நோய்”( disease) என்ற கணக்கில் சேர்க்க முடியாது.
“குறைபாடு”(deficiency) என்ற கணக்கிலும் சேர்க்க முடியாது
அதனால் தான் “குளறுபடி” ( Messing up of hormones) என்ற கணக்கில் சேர்த்துள்ளேன்
முறையாக ஹார்மோன்கள் சுரக்காமல் தாறுமாறி சுரப்பதால் இதை “Disorder” என்கிறோம்
ஒரு பூப்படைந்த பெண்ணுக்கு முறையாக நிகழ வேண்டிய நிகழ்வு
பிரதிமாதம் வர வேண்டிய மாதவிடாய் ( Menstruation)
மாதவிடாய் என்பதை சுருக்கமாக கூறவேண்டுமென்றால்
ஒவ்வொரு மாதமும் இனப்பெருக்க வயதை அடைந்த பெண்ணிற்கு அவளது கருவில் ( ovary) இருந்து ஒரு முட்டை (ovum) முதிர்ச்சி அடைந்து உடைந்து வெளியேறும் .
அந்த முட்டையை அவளது துணையின் ஒரு விந்தணு பல கோடி சக போட்டியாளர்களை முந்தி ஓடோடி வந்து நலம் விசாரித்து காதலாகி கூடல்( fertilisation) கொண்டால் அது கருவாக (zygote) உருவாகும்.பின் அது தவழந்து சென்று கர்ப்பபையில் அட்டைப்பூச்சி போல ஒட்டிக்கொள்ளும்.அங்கிருந்து தாயின் உதிரத்தை உறிஞ்சி வளரும்.அதுவே அடுத்த பத்து மாதங்களில் சிசுவாகி வெளியே வரும்.
இது இணையுடன் கூடல் கொள்ளும் பெண்களுக்கு நிகழும் இயற்கை நிகழ்வு.இப்போது மற்றொரு சினாரியோவுக்கு வருவோம்.இன்னும் திருமண பந்தத்தில் இணையாத சிற்றிளம்பெண்களுக்கு இந்த கரு முட்டையானது மாத மாதம் வெளியேற்றப்படும்.கருமுட்டையுடன் கூடவே கர்ப்பபையில் உள்புற சுவரும்( endometrium) சேர்ந்து வெளியேற்றப்படும் இயற்கையான நிகழ்வு தான் மாதவிடாய்.
மாதவிடாய் சிக்கல் ஏன் ஏற்படுகிறது?
அதற்கு மாதவிடாயின் மருத்துவ அறிவியல் குறித்த சிறிய ரீகேப் அவசியம்.PCOD என்பது ஹார்மோன்களின் சதிராட்டம் என்று கூறியதற்கு காரணம் அறிவோம் வாருங்கள்
ஈஸ்ட்ரோஜென் எனும் பெண்மைக்கான ஹார்மோனின் தூண்டுதலால் நமது சினைப்பையில்( ovary) பல முட்டைகள்( ova) ஒரே நேரத்தில் வளர்ச்சி காண ஆரம்பிக்கும். அந்த முட்டை அடங்கிய தொகுப்பை Graafian follicle என்போம்.
இந்த முட்டை வளர்ச்சிக்கு தொடர்ந்து அவளது மூளையின் பிட்சூடரி எனும் சுரப்பியில் இருந்து சுரக்கும் follicular stimulating hormone எனும் ஹார்மோனின் தூண்டுதல் தேவை.நன்கு முட்டை வளர்ந்ததும் மூளையில் இருந்து லூடினைசிங் ஹார்மோன்(lutenising hormone) சுரக்கும்.
அந்த ஹார்மோன் ரத்தத்தில் கலந்து உச்ச நிலையில் இருக்கும் 24 இல் இருந்து 36 மணி நேரத்தில், ஒரு முட்டை சினைப்பையில் இருந்து வெளியேறும்.முட்டையை வெளியேற்றியவுடன் சினைப்பையில் இருக்கும் க்ராஃபியன் ஃபாலிகிள் – கார்பஸ் லூடியம் (corpus luteum) எனும் பகுதியாக மாறும்.
வெளியேறிய முட்டை சினைக்குழாயில் (Fallopian tube) வந்து 24 முதல் 36 மணி நேரம் காத்திருக்கும்.
யாருக்காக இந்த காத்திருப்பு??
தன்னை சந்தித்து முழுமை படுத்த விந்தணுவில் ஏதேனும் ஒன்றாவது வந்து விடாதா என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் நமது கதாநாயகியான கருமுட்டை.
க்ளைமேக்ஸ் ஒன்று
தன்னை சந்திக்க கோடிக்கணக்கான விந்தணுக்களில் ஒன்று வந்தவுடன் அதனுடன் இரண்டறக்கலந்து கருமுட்டையாக மாறிவிடும்.
இது சுபமான முடிவு.
முட்டையை வெளியேற்றியவுடன் மீதம் இருந்த கார்பஸ் லூடியம் ” ப்ரொஜஸ்டிரான்” progesterone எனும் ஹார்மோனை சுரக்கும்
இந்த ஹார்மோன் தான் அவளது கருப்பையை கர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் தயார் செய்யும்.
கருப்பைக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி கர்ப்ப பையை மெத்தை போல ஆக்கும்.
அந்த மெத்தையில் நமது கருமுட்டை சென்று ஒட்டிக்கொண்டு கருவாக வளர்ந்து குழந்தையாக உருமாறுகிறது.
க்ளைமேக்ஸ் இரண்டு
தன்னை வந்து சேர கதாநாயகனான விந்தணு கண்ணுக்கெட்டிய தூரம் வராததை அறிந்த முட்டை.. பசலை நோய் கொண்டு உண்ணாமல் உறங்காமல்24 முதல் 36 மணிநேரத்தில் மரணித்து விடும்.அந்த முட்டை இறந்த செய்தி கேட்டதும் சினைப்பையில் இருந்த கார்பஸ் லூடியம் – ப்ரோஜெஸ்டிரான் சுரப்பதை நிறுத்தி விட்டு, தானும் அழிந்து விடும்.
ப்ரோஜெஸ்டிரான் இல்லாதகர்ப்ப பை
மழையில்லாத கழனி போல பசுமை இழந்து வரண்டு விடும்.
சிறிது நாட்களில் இந்த கர்ப்ப பை கழிவுகள் அனைத்தும் வெளியேறி கர்ப்ப பை மற்றொரு மாதவிடாய் சுழற்சிக்கு தயாராகி விடும்.இந்த கழிவு வெளியேற்றத்தைபீரியட்ஸ் / மென்சஸ் என்று அழைக்கிறோம்.
மாதவிடாய் சுழற்சியை உன்னிப்பாக கவனித்தால்இந்த தொடர் நிகழ முக்கியமான தேவைஹார்மோன்கள் தான்
ஈஸ்ட்ரோஜென் , FSH , LH போன்ற ஹார்மோன்கள் சரிவிகிதத்தில் டைம் செட் செய்து வைத்தார் போல் ஏறி இறங்க வேண்டும்.இதில் நடக்கும் பிரச்சனைகள் தான் மாதவிடாய் சுழற்சி கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
வைரமுத்து அவர்கள் ஆய்த எழுத்து படத்தில் ஒரு பாடலில்”எந்தன் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு” என்று கற்பனை செய்திருப்பார்
பெண்ணிற்கு மாதவிடாய் நிகழ சில நேரங்களில் வெள்ளப்பெருக்கும்சில நேரங்களில் வறட்சியும் அவசியம்.
ஏன் இந்த ஹார்மோன்கள் குளறுபடி நிகழ்கிறது ?
இன்சுலின் எனும் ஹார்மோன் கணையத்தில் சுரப்பதை அறிவோம்அதன் வேலை உடலை கட்டமைப்பது.தசைகளை ஏற்றுவது.மனிதனை திடமாக்குவது.
கூடவே உண்ணப்படும் மாவுச்சத்தில் இருந்து கிடைக்கும் க்ளூகோசை உடலில் உள்ள அனைத்து செல்களுக்கு ஏற்ற எரிபொருளாக அல்லது உணவாக உண்ணத்தருவது.இந்த இன்சுலினின் இன்னொரு வேலை..
மாதமாதம் கருமுட்டை சினைப்பையில் இருந்து வெளியேற உதவுவது.( ovulation)
ஒருவர் தான் இருக்க வேண்டிய எடையில் இருந்து அதிகமாவது ( obesity)அதிகமாக மாவுச்சத்து உணவுகளை உண்பது ( Very high carb diet)உடல் பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ( sedentary life style)
இவற்றால் இன்சுலின் தனது வேலையை சரியாக செய்யாமல் தர்ணாவில் ஈடுபடுகிறதுஇதை “இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்” என்கிறோம்.இன்சுலின் தனது வேலையை சரியாக செய்யாமல் இருப்பது தான் இது.
இதனால்PCODஐ பொறுத்த வரை கருமுட்டை சரியாக வெளியேறாது.இதற்காகத்தான்PCOD க்கு மெட்ஃபார்மின் மாத்திரை பரிந்துரை செய்யப்படுகிறது.
பல புதிதாக திருமணம் ஆன வீட்டில் புதுப்பெண் Metformin மாத்திரை விழுங்கினால் அவருக்கு சுகர் இருப்பதாக மாமியார்கள் நினைக்கிறார்கள்.
அது தவறு மாமியார்களே..
உங்களை நம்பி மருமகளாக வந்த அந்த இளம்பெண்ணுக்கு PCOD எனும் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒரு சிறிய பிரச்சனை தான் இருக்கிறது.
சுகர் குறைபாட்டிலும் இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் போவது தான் காரணமாக இருப்பதால்
இன்சுலினை நன்றாக வேலை செய்யக்கட்டளையிடும்
Metformin மாத்திரை தரப்படுகிறது.எனவே உங்கள் மருமகளை அரவணைத்து செல்லுங்கள்.அவளுக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகள் களைய உதவுங்கள்.அவள் உடல் எடை அதிகமாக இருந்தால் பேலியோ உணவு முறையை பரிந்துரை செய்யுங்கள்.
தினமும் உடற்பயிற்சி இருவரும் சேர்ந்து செல்லுங்கள். அதிகம் பேசுங்கள்.PCOD என்பது எளிதில் குணமாகக்கூடிய ஒரு பிரச்சனை.
மாவுச்சத்து குறைத்து நல்ல கொழுப்புணவை அதிகம் உண்ணும் பேலியோ உணவு முறையில் பயன் பெற்ற பல பெண்கள் உள்ளனர்.பேலியோ + மகப்பேறு மருத்துவரின் சிகிச்சை மூலம் கர்ப்பம் தரிக்க இயலும்.
ஒரு பெண் கர்ப்பம் தரித்து தாயாவது முக்கியம் தான்.ஆனால் அதை விட முக்கியம் அவளது மாண்பு , ரகசியங்கள் , சுயமரியாதை பேணிப்பாதுகாக்கப்படுவது..
அன்புள்ள மாமியார்களேஉங்களை நம்பி தான் ஒரு பெண் தன் வீட்டை விட்டு உங்களுடன் சேர்ந்து வாழ வருகிறாள்.அவளையும் சகமனுசியாய் மதியுங்கள்.
அவளுக்கு நேரும் உடல் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்ய உதவுங்கள்.
“மலடி”
“என் மகன இப்டி ஒரு தரிசு நிலத்துக்கு கொடுத்துட்டேனே”என்று கரித்துக்கொட்டாதீர்கள்
உங்கள் மகனுக்கு விந்தணுக்கள் சோதனை செய்து பார்த்தால் 100 க்கு ஐம்பது சதவிகித வாய்ப்பு , விந்தணு குறைபாடு இருக்க வாய்ப்புண்டு.இன்னும் சிலருக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பதும் கண்டறியப்படுகிறதுஒரு ஆண் ஒரு பெண்ணைஒரு பெண் ஒரு ஆணை திருமணம் செய்வது தனக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகளை ஏமாற்றி பிழைக்க அல்ல.
உடலியல் சார்ந்த சரிசெய்யக்கூடிய பிரச்சனைகளைக்கூடசமூகம் ஏற்கும் நிலை இன்னும் வரவில்லை.ஆனால் அந்த நிலையை நோக்கி முன்னேறவே இது போன்ற பதிவுகள்.இந்த சமூகத்தில் திருமணம் முடிந்து சென்று மாமியார்களுக்கும் கணவர்களுக்கும் தெரியாமல் மறைத்து மறைத்து வைத்து தைராய்டு மாத்திரைகளை
PCOD மாத்திரைகளை உண்ணும் மருமகள்கள் இருக்கிறார்கள்
அந்த மருமகள்களுக்காக இந்தப் பதிவு.
முடிவுரை
1. PCOD குணப்படுத்தக்கூடியது
2. குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை PCOD ஐ குணப்படுத்தும்
3. PCOD உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்க இயலும்
4. மாமியார்கள் தங்களின் மருமகள்களின் உடல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்று அவற்றை களைய வேண்டும்.
5. மருமகள்கள் தங்கள் பிரச்சனைகளை மூடி மறைக்க வேண்டியதில்லை .
பகிரங்கமாக அதே சமயம் சாமர்த்தியமாக தங்களது உடல் சார்ந்த பிரச்சனைகளை தெரிவிக்கலாம். எத்தனை காலம் மறைக்க முடியும்.? மறைத்து செய்வதற்கு இது ஒன்றும் குற்றம் அல்ல.
6.மாமியார்களும் ஒரு காலத்தில் மருமகள்களே.
அவர்களும் பெண்களே என்பதால் நிச்சயம் மற்றொரு பெண்ணின் பிரச்சனைகளை கரிசனத்துடன் அணுகுவார்கள்.
7. உங்கள் கணவரிடம் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை தெரிவியுங்கள். அவர் உங்களது அத்தனை நன்மை தீமைக்கும் பொறுப்பாகிறார்.
அவரது ஆதரவு நிச்சயம் உங்களுக்கு தேவை.
8. PCOD குறித்த கருத்து வேறுபாடுகள் தோன்றுமாயின் உடனே மகப்பேறு மருத்துவர்/ குடும்ப மருத்துவரை சந்தியுங்கள். அவர்கள் தரும் கவுன்சிலிங்கில் பிரச்சனை சரியாகிவிடும்.
பிரச்சனையை மறைப்பது தீர்வாகாது.அதை சாமர்த்தியமாக பகிரங்கப்படுத்திஅதை தீர்ப்பதே தீர்வு.
.நன்றி,
Dr.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர்,சிவகங்கை