கர்ப்பிணிக்கு இந்த அறிகுறி இருந்தா ரத்தம் கம்மியா இருக்குன்னு அர்த்தம்!

கர்ப்பக்காலத்தில் பெண்ணின் உடலில் உற்பத்தியாகும் 50% ரத்தம் குழந்தையின் வளர்ச்சிக்கு சென்றுவிடுகிறது. அதனால் ரத்த உற்பத்தி அதிகமாக தேவைப்படுகிறது.

ஹீமோகுளோபின்

உடலில் ரத்தத்தில் இருக்கும் சிக்கலான புரதம் இது. உடலில் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு இரண்டையும் உடலின் பிறபகுதிகளுக்கு எடுத்து செல்ல இவை உதவுகிறது. இரத்த சிவப்பு அணுக்களுக்கு பிரதானமான தேவையான இந்த சத்து குறைபாடு இயல்பாக கர்ப்பக்காலத்தில் உண்டாவதே என்றாலும் அளவுக்கதிகமாக குறைவது தாய்-சேய் ஆரோக்கியதுக்கு நல்லது அல்ல.

கர்ப்பக்காலத்தில் பெண்ணுக்கு 12 முதல் 16 கிராம் அளவு வரை ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். இந்த அளவு குறையும் போது பல அறிகுறிகளை வெளிப்படுத்தும்பெரும்பாலும் இவை மசக்கைக்கான அறிகுறிகள் என்பதால் பலரும் இதை அலட்சியம் செய்துவிடுகிறார்கள்.

அதிக உடல் சோர்வு

கர்ப்பம் உறுதியான நாள் முதல் கர்ப்பிணி பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களை சந்திப்பார்கள். இதனால் உடல் சோர்வு இருப்பது போன்று இருக்கும். செய்யும் வேலையிலும் மந்தம் உண்டாகும். இவை வழக்கமான மசக்கை என்று நினைக்கலாம். ஆனால் உடலின் ஒட்டு மொத்த உறுப்புகளும் சோர்வடைந்திருக்கும். எப்போதும் சுருண்டு படுத்துகொண்டிருக்க சொல்லும். படுத்தாலும் உடலில் வலு இல்லாத போன்ற உணர்வை பெறுவார்கள். எழுந்து நின்றாலும் தலைச்சுற்றல் உணர்வை அதிகமாக உணர முடியும். அதிகப்படியான பலம் இழக்கும் போது பசியின்மையும் உண்டாகும்.

வெளிறிய சருமம்

ஹீமோகுளோபின் குறைபாடு என்பது கடுமையான ரத்த சோகையை உண்டாக்கும். அதனால் கண்களில் வெளுப்பு அதிகமாக தெரியும். சருமமும் வெளுத்திருக்கும். சிலருக்கு நாக்கு வெளிறி இருக்கும். கை மற்றும் கால் விரல்களின் நகங்கள் உடையும். அதனால் தான் இந்தியாவில் கர்ப்பக்காலத்தில் பெண்கள் அதிக ரத்தசோகை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

வேகமான இதயதுடிப்பு

வழக்கமான இதயத்துடிப்பை காட்டிலும், கர்ப்பக்காலத்தில் வேகமாக இதயத்துடிப்பு இருக்கும். சில பெண்களுக்கு வேகமாக நடக்கும் போது இதயதுடிப்பு வேகத்தை உணரமுடியும். இன்னும் சில பெண்களுக்கு ஓய்வாக இருக்கும் போது கூட, இதயத்துடிப்பு வேகமாக மாறுவதை உணர முடியும். இவை நிலையாக இருக்காது சில நேரங்களில் அதிகமான இதயத்துடிப்பும், சில நேரங்களில் இதற்கான அறிகுறிகளும் இல்லாமல் இருக்கும். அடிக்கடி நெஞ்சு வலிப்பது போன்ற உணர்வு இருக்கும்.

மூச்சுவிடுதலில் சிரமம்

கர்ப்பக்காலத்தின் இரண்டாம் ட்ரைமெஸ்டரில் குழந்தையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அப்போது கர்ப்பப்பை விரிவாகும் போது இயல்பாக மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்வார்கள். ஆனால் அதற்கு முன்னதாக இருந்தே அதிகப்படியான மூச்சுத்திணறலுக்கு உள்ளானால் அது கவனிக்க வேண்டிய அறிகுறிகளில் ஒன்று. சிலருக்கு எழுந்தால் நின்றால் நடந்தால் கூட மூச்சு வாங்கும்.

குளிர் உணர்வு

கர்ப்பிணிகள் ரத்த சோகை பிரச்சனைக்கு உள்ளானால் சாதாரண வெப்பநிலையிலும் அதிக குளிரை உணர்வார்கள். அவர்களது கை மற்றும் கால் பாதங்கள் இரண்டும் சில்லென்று இருக்கும். சற்று அதிகமான குறைபாடு இருக்கும் போது உடலில் நடுக்கம் உண்டாகும். பலரும் இதை குளிர்காய்ச்சல் என்று நினைத்தும் அலட்சியப்படுத்துவது உண்டு.

இந்த நான்கு பொதுவான அறிகுறிகள் கர்ப்பிணியின் உடலில் ஹீமோகுளோபின் பற்றாக்குறையை உணர்த்தும் அறிகுறிகள். ஆனால் பெருமளவு இவை கர்ப்ப கால மசக்கையோடு தொடர்பு கொண்டிருப்பதால் அறிகுறிகள் தீவிரமாகும் போது கண்டறியப்படுகிறது.

பெரும்பாலும் கருவுற்ற பிறகு முறையான தொடர் சிகிச்சையில் இருந்தால் ஆரம்பநிலையிலேயே சத்து குறைபாடு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற முடியும். இல்லையெனில் அதிக குறைபாடு ரத்த சோகை உண்டாக்கி தாய்-சேய் இருவருக்குமே உடல் உபாதைகளை உண்டாக்கிவிடும். சமயங்களில் தாயின் இதயத்துக்கு ரத்த ஓட்டம் கிடைப்பதிலும் பிரச்சனையை உண்டாக்கும். அதனால் கர்ப்பக்கால அறிகுறிகளை மசக்கையாக நினைக்காமல், தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கவும் தயங்க வேண்டாம்.

Exit mobile version