குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசியை, காலம் தவறாமல் போடுவது, பெற்றோர்களின் முக்கியமான பொறுப்புகளின் ஒன்றாகும்.

ஒரு குழந்தைக் கருவில் உருவானவுடனே, அக்குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போடப்படத் தொடங்குகிறது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு போடப்படும் தடுப்பூசிகள் மூலமாக, அது குழந்தைகளைச் சென்றடைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைப் பிறந்த பிறகும் தடுப்பூசிப் போடப்படுவது தொடர்கிறது.
ஒரு பெற்றோருக்குரிய முக்கியமான கடமை என்னவென்றால், தங்களது குழந்தையின் தடுப்பூசி அட்டவணையை முறையாகப் பின்பற்றுதல் ஆகும். எந்த ஒரு சூழ்நிலையானாலும், குழந்தைகளுக்குப் போடப்பட வேண்டிய தடுப்பூசியின் அவசியத்தை புரிந்துகொண்டு, காலம் தாழ்த்தாமல் போட்டு விட வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், மருத்துவமனைக்குச் செல்ல பெற்றோர்கள் தயக்கம் காட்டாமல், மருத்துவருடன் கலந்தாலோசித்து தடுப்பூசியை அதினதின் காலத்தில் போட்டு விட வேண்டும்.தற்போதைய சூழலில் இதுவும் மிக முக்கியமான ஒன்று என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிட்டத்தட்ட 80 மில்லியன் குழந்தைகள் டிப்தீரியா, அம்மை மற்றும் போலியோ உள்ளிட்ட நோய் தடுப்பூசியை தவறவிட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. இது போன்ற ஆபத்தான நோய்களுக்கு, தடுப்பூசி தான் என்றுமே பாதுகாப்பு. ஒருவேளை நீங்களும் ஊசிபோடுவதை தவறவிட்டிருப்பீர்களானால் கவலை வேண்டாம். மீண்டும் தடுப்பூசி அட்டவணையை தொடங்குவது எவ்வாறு என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
தடுப்பூசி என்றால் என்ன?
பொதுவான நோய்கள் மற்றும் தொற்று நோய்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவே தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இது வளரும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஒரு குழந்தையின் நோய் எதிர்ப்பு அமைப்பு 7 முதல் 8 வயது வரை முழுமையாக வளர்ச்சியடையவில்லை என்றால், நோய் தொற்றுகளில் இருந்து அவர்களை பாதுகாக்க, குழந்தைகளின் தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். எனவே குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் மிகவும் முக்கியமானது.
தடுப்பூசி அட்டவணை
வருமுன் காப்பதே சிறந்தது என்பதற்கினங்க, நோய் வந்த பின் குணப்படுத்துவதை விட, அந்த நோய் வராமல் தடுப்பதே என்றும் சிறந்தது. உங்கள் குழந்தைக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கும் எளிய வழி, குழந்தை பராமரிப்பு மருத்துவரின் ஆலோசனையுடன் தடுப்பூசி அட்டவணையை உருவாக்கி, அதைப் பின்பற்ற வேண்டும்.கர்ப்ப காலம் தொடங்கி குழந்தை பிறந்த பின்னரும் அட்டவணையை பின்பற்ற வேண்டும்.இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
தடுப்பூசி தவறவிட்டால்
இப்போது பல பெற்றோரின் மனதில் இருப்பது தடுப்பூசி தவறவிட்டுவிட்டேனே, என்ன செய்வது என்பது தான். தடுப்பூசி போடாமல் இருப்பது குழந்தைக்கு ஆபத்தைக் கொண்டு வந்துவிடும். எனவே, தாமதமாயினும் தடுப்பூசி போட்டுக்கொள்வது குழந்தைகளுக்கு நல்லது.எனவே, மருத்துவரிடம் இருந்து ஆலோசனைப் பெற்றுக் கொண்டு, தவறவிட்ட தடுப்பூசியை உங்கள் குழந்தைக்கு போட்டுக்கொள்ளலாம்.
உங்கள் குழந்தையை அம்மை, போலியோ, டிப்தீரியா மற்றும் கடுமையான இருமல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க தடுப்பூசி எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்துக் கொண்டு, காலம் தாழ்த்தாமல் தடுப்பூசியைப் போடுங்க. குழந்தையின் ஆரோக்கியத்தை பேணி காத்திடுங்க…