கேக்-னா யாருக்குத் தான் பிடிக்காது. அதனால, இன்னைக்கு ஒரு வித்தியாசமான, மூவர்ண இயற்கை கேக் எப்படி செய்றதுனு பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு எப்படியாவது சத்தான இயற்கை உணவுகளைக் கொடுக்கனும்னு தான் எல்லாருமே ஆசைப் படுவாங்க. அதுவும் இப்ப குழந்தைங்க வீட்லயே இருக்குறதுனால, தினமும் ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு தாங்கனு வேற கேட்பாங்க. செஞ்சதையே திரும்ப திரும்ப செஞ்சு போர் அடிச்சிடுச்சா, கவலைய விடுங்க. இன்னைக்கு வித்தியாசமான மூவர்ண இயற்கை கேக் செஞ்சுக் கொடுத்து அசத்திடுங்க…
தேவையான பொருள்கள்
- இயற்கை கலரிங் (கேரட் , புதினா)
- பொடித்த அவல் – 3 கப்
- தேங்காய்
- கரும்பு ஜுஸ்
- வாழைப்பழம்
- ஏலக்காய் தூள்
- நறுக்கிய முந்திரி, பாதாம்
- வெண்ணிலா எசென்ஸ்
குறிப்பு
கடைகளில் விற்கும் செயற்கை வெண்ணிலா எசென்ஸ் வேண்டாம். அதற்குப் பதிலாக, வெண்ணிலா பீன் வைத்து எசென்ஸ் தயார் செய்துக்கோங்க. அதை எப்படி செய்றதுனு தெரியலனா பரவாயில்லை. சுவைக்கு ஏலக்காய், சுக்கு சேர்த்துக்குங்க, அது போதும். நான் இன்னைக்கு வெண்ணிலா பீன் வைத்து எசென்ஸ் செஞ்சு எடுத்துருக்குறேன்.
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் கேரட், தேங்காய், வெண்ணிலா எசென்ஸ், வாழைப்பழம் எல்லாத்தையும் ஒன்னா சேர்த்து, நல்லா அரைச்சு வடிகட்டி, தனியா எடுத்து வச்சுக்கோங்க. இப்போ ஆரஞ்சு கலர் தேங்காய் பால் ரெடி.
- அரைக்கும் போது தண்ணீருக்கு பதிலா, கரும்பு ஜூஸ் சேர்த்து அரச்சுக்கோங்க, சுவையா இருக்கும்.
- அதே மாதிரி, பச்சை நிறம் வருகிறதுக்கு, புதினா, தேங்காய், வெண்ணிலா எசென்ஸ், வாழைப்பழம் எல்லாத்தையும் ஒன்னா சேர்த்து, நல்லா அரைச்சு வடிகட்டி, தனியா எடுத்து வச்சுக்கோங்க. இப்போ பச்சை கலர் தேங்காய் பால் ரெடி.
- அதே மாதிரி, வெள்ளை நிறம் வருகிறதுக்கு, வெறும் தேங்காய், வெண்ணிலா எசென்ஸ், வாழைப்பழம் மட்டும் போதும். வேற எதுவும் தேவை இல்லை. இப்போ வெள்ளை கலர் தேங்காய் பால் ரெடி.
- ஒரு கப் பொடித்த அவலுக்கு, ஒரு கப் கலர் தேங்காய் பால் ( அரைச்சு வச்சிருக்குற ஆரஞ்சு, பச்சை, வெள்ளை ) தேவை.
- அடுத்ததா 3 கலர் தேங்காய் பாலுக்கும், பொடித்த அவலை மூணு பங்கா பிரிச்சு வச்சிக்கோங்க. கலந்து வச்சிருக்குற எல்லாக் கலவையிலும், பொடி பொடியா நறுக்கிய வச்சிருக்குற முந்திரி, பாதாம் சேர்த்துக்குங்க. கேக் சாப்பிடும் போது, வாயில கடிபடுறப்ப சுவையா இருக்கும். குழந்தைகளும் விரும்புவாங்க.
- இப்ப ஒரு தட்டு அல்லது ஒரு பாத்திரத்திலோ, உலர்ந்த பருத்தி துணியை விரிச்சு, அதுல ஒரு பங்கு பொடித்த அவலில், பச்சை நிற தேங்காய் பாலக் கலந்து (இட்லி மாவு பதம் இருக்கணும்) தேவையான வடிவத்தில் அந்த தட்டில் பரப்பி விடுங்க.
- அப்புறம் ஒரு 5 நிமிஷம் கழித்து, வெள்ளை கலவையை எடுத்து, அது மேல ஊத்தி, மறுபடியும் 5 நிமிஷம் விடுங்க.
- கடைசியா, அதே போல ஆரஞ்சு கலவையை ஊத்துங்க. 20 நிமிஷம் அப்படியே விட்டுடுங்க.
இப்ப சின்ன சின்ன துண்டுகளா வெட்டி எடுத்தா, சுவையான இயற்கை மூவர்ண கேக் ரெடி…