பொடுகுக்கு குட்பை சொல்ல இத செஞ்சாலே போதும்!!

நமது தலையில் உள்ள இறந்த செல்கள் சேர்ந்து, செதில் செதிலாக வருவது தான் பொடுகு. இது முடிகளின் வேர்களைப் பலவீனம் அடையச் செய்கிறது. அதனால், முடியும் உதிர ஆரம்பித்து விடுகிறது. பொடுகை விரட்ட சில இயற்கை வழிமுறைகளைக் குறித்து இங்கே பார்க்கலாம்.

சிலருக்கு தலை எப்பொழுதும் பார்த்தாலும் அரித்துக் கொண்டே இருக்கும். பொடுகு வந்துட்டா அவ்வளவு சீக்கிரம் போகாது. இதற்காக விற்கப்படும் எந்த ஷாம்புக்களும் முழுமையாகப் பொடுகைப் போக்குவதில்லை. வறண்ட கூந்தலும்,  எண்ணெய் வடியும் கூந்தலும் பொடுகுத்தொல்லையை அதிகரிக்கத்தான் செய்யும். இயற்கை வழிமுறைகளை, முறையாக கடைப்பிடித்தாலே போதும். பொடுகை விரட்டி அழகானக் கூந்தலைப் பெறலாம். அதைப் பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

வேப்ப எண்ணெய்

வேப்பெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய், சொட்டுக்கள் எடுத்து, இரண்டையும் கலந்து, தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். 30 முதல் 45 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பிறகு வெறும் தண்ணீரால் அலசி விடவும். இப்படி வாரத்தில் 2 முதல் 3 முறை செய்து வந்தால் மாற்றத்தைக் காண முடியும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைச்சாறு

தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடுபடுத்தி, எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து, இரண்டையும் நன்றாகத் தலையில் தேய்த்து, 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசி விடுங்கள். தொடர்ந்து வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் 4 வாரங்களில் பொடுகுத் தொல்லை படிப்படியாக குறைந்து வருவதைக் காணலாம். எலுமிச்சைச்சாறு கூந்தலை வறண்டு போக செய்யும் என்பதால் குறைந்த அளவு பயன்படுத்தினால் போதுமானது.

பூண்டு மற்றும் ஆலிவ் எண்ணெய்

நசுக்கி எடுத்த ஒரு சில பூண்டு பற்களுடன், ½ கப் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, 5 நிமிடங்கள் சூடாக்கி பிறகு வடிகட்டி கொள்ளவும். இதை ஆறியவுடன் உச்சந்தலையில் தேய்க்கவும். சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பிறகு அலசி விடவும். இதை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தி வரும்போது, பொடுகுத் தொல்லை குறைவதைக் காணலாம்.

வெந்தயம்

வெந்தயம், நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெந்தயத்தை உங்கள் தேவைக்கேற்ப எடுத்து, இரவில் ஊற வைத்து, காலையில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை முடியின் வேர்களின் படும்படி நன்றாக தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தலையை நன்றாக தேய்த்து குளியுங்கள். இது பொடுகு மட்டுமல்லாமல், கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த மருந்து. இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றம் தெரியும். வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி என்பதால், குளிர்ச்சியான உடல் நிலையைக் கொண்டவர்கள், பயன்படுத்தும் போது கவனம் கொள்ள வேண்டும். அதிக அளவு பயன்படுத்த வேண்டாம்.

வெங்காயச் சாறு

பாதி வெங்காயத்தை எடுத்து, அதை அரைத்து, அதன் சாறைப் பிழிந்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இந்தச் சாறை உச்சந்தலை முழுவதும் அதை நன்றாகத் தடவவும்.பின்பு ஒரு மணி நேரம் அதை அப்படியே விட்டு விட்டு, பிறகு அலசி விடவும். இவ்வாறு வாரத்தில் 2 நாட்கள் செய்து வந்தால் பொடுகு பிரச்சனையிலிருந்து ஈசியாக விடிதலைப் பெறலாம்.

Exit mobile version