எனக்குத் திருமணமான அடுத்த நாளே என் கணவர், அவரின் நண்பன் ஒருவனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். எனக்குத் திருமணமான அன்றிலிருந்து இன்றுவரை என் கணவர் என்னைவிட அவர் நண்பனுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார், அது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.
எங்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஒன்றுவிடாமல் அவரின் நண்பரிடம் சொல்லி வைத்துவிடுவார் என் கணவர். நாங்கள் திருமணமான புதிதில் சுற்றுலா சென்றோம். அப்போதுகூட அவரின் நண்பனையும் கூடவே கூட்டிக்கொண்டு வந்தார்.அதில் எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை..
நானும் பலமுறை அவரிடம் இதைப்பற்றி சொல்லிவிட்டேன். ஆனால் அவர் அதைப்பற்றிக் கண்டுகொள்வதேயில்லை.
விடுமுறை நாட்களிலாவது என்னுடன் நேரம் செலவிடுவார் என்று நினைத்தால், அப்போதும் அவர் தன் நண்பருடனேதான் நேரம் செலவிடுகிறார். என்னை ஒரு மனைவியாக இல்லாவிட்டாலும், ஒரு மனிஷியாகக் கூட மதிப்பதில்லை.
இப்படியே போய்க் கொண்டிருந்த நிலையில் அன்று ஒருநாள் என் கணவர் அவருடைய அறையில் தன் நண்பருடன் இருந்தார். அப்போது என்னுடைய அப்பா, அம்மா, அண்ணன் மற்றும் எங்கள் வீட்டில் எல்லோரும் என்னைப் பார்ப்பதற்காக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.
எல்லோரும் மாப்பிள்ளை எங்கமா? என்ன பண்ணிக கொண்டு இருக்கிறார்? எனக் கேட்கவே, நான் அவருடைய அறையின் கதவைத் தட்டினேன். உடனே அவர் என்னைத் தொந்தரவு செய்யாதே? ஒரு பத்து நிமிடத்தில் வெளியே வருகிறேன் என்று சொல்லிவிட்டுத் திரும்பவும் அவருடைய அறைக்குள்ளேயே சென்றுவிட்டார். என் வீட்டிலிருந்து வந்த அனைவரும் மாப்பிள்ளை ஏன் இப்படி செய்கிறார்?? என மனம் வருந்தினர்..
எனக்கும் எங்கள் வீட்டிலிருந்து என்னைப் பார்க்க வந்த உறவினர்களை அவமானபடுத்தியதைப் போல் என் கணவர் நடந்துகொண்டது கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அதனால் அன்று என் உறவினர்கள் சென்றபின் அவரிடம் பயங்கரமாக சண்டையிட்டேன்.
“உங்களுக்கு என்னைவிட உங்கள் நண்பன்தான் பெரிது இல்லையா?? பிறகு ஏன் என்னைத் திருமணம் செய்தீர்கள்??” என்று பயங்கரமாக அவரைத் திட்டினேன். அவருடைய நண்பனும் பேசாமல் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். இறுதியாகக் கேட்கிறேன், “உங்களுக்கு நான் முக்கியமா? இல்லை உங்கள் நண்பன் முக்கியமா?” என்று அவரின் நண்பனின் முன்பே கேட்டுவிட்டேன்.
அப்போதும் அவர் “எனக்கு என் நண்பன்தான் முக்கியம்” என்று பதிலளித்தார்.ஆத்திரம் தாங்காமல் கோபத்தில் அவர் நண்பரை அடித்துக் கீழே தள்ளிவிடப் போனேன். உடனே என் கணவர் என்னையே பளாரென்று கன்னத்தில் அறைந்துவிட்டார். உடனே நான்,”உங்கள் நண்பனுக்காக என்னையே அடித்துவிட்டீர்கள் இல்லையா? ” என்று மனம் வருந்தி அழுதேன்.
உடனே அதற்கு அவர், “எனக்கு வேலை கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் இந்த தெய்வத்தைக் கீழே தள்ளி உடைத்துவிட்டாயென்றால் நாம் இருவரும் தெருவில்தான் நிற்க வேண்டும்..” என்று திரும்பவும் தன் நண்பனான மடிக்கணினியைப் பற்றிதான் கவலைக் கொள்கிறாரோ தவிர, என்னைப் பற்றித் துளியளவும் கவலை கொள்ளவில்லை.
ஐயோ! ஆண்டவா! இந்த மடிக்கணினியில் வேலை செய்யும் ஒவ்வொருவருமே எங்கு சென்றாலும் இப்படித்தான் தன் மடிக்கணிணியை மடியில் கட்டிக் கொண்டே அலைவார்கள் போல என்று நினைத்துத் தலையில் அடித்துக் கொண்டேன்! வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?!