இது அவள் தவறல்ல!

என் தோழி ஒருத்தி, அவள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டாள். ஒரு குழந்தைக்குத் தாயாக இருக்கும் அவள், தன் ஐந்து மாதக் குழந்தையை தூங்க வைத்துவிட்டுத் தண்ணீர் குடிப்பதற்கு சென்றிருக்கிறாள்.

கட்டிலில் அவளுடைய கணவர் குழந்தையின் பக்கத்தில் படுத்திருந்தாலும், நன்றாகத் தூங்கிக் கொண்டு இருப்பவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென எண்ணி, குழந்தையும் தூங்கிக் கொண்டுதானே இருக்கிறான் என்று நினைத்துவிட்டு தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்குள் சென்றிருக்கிறாள்.

அவள் சமையலறைக்கு சென்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போது திடீரெனக் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதும், கையில் வைத்திருந்த தண்ணீர்க் கோப்பையை கீழே போட்டுவிட்டு வேகமாக ஓடிவந்து பார்த்தால், குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து அழுது கொண்டிருந்திருக்கிறது.

அவள் செய்வதறியாதல் திகைத்துப் போய் அழுதுகொண்டு நின்றிருக்கிறாள். தூங்கிக் கொண்டிருந்த அவளுடைய கணவரும் வேகமாகத் தன் குழந்தையைத் தூக்கி கையில் வைத்துக் கொண்டு இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டிருக்கிறாள். அதற்குப்பின அழுகின்ற குழந்தையை சமாதானம் செய்வதற்கு இருவரும் முயற்சி செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள்.

அவர்களின் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த அவளுடைய மாமனாரும், மாமியாரும் என் தோழியின் அறைக்குள் வந்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் நல்லவேளை குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை.அதற்குப்பின் குழந்தை கீழே விழுந்துவிட்ட விஷயத்தை சொன்னவுடன் இருவரும் சேர்ந்து பயங்கரமாக அவளைத் திட்டியுள்ளனர். அதனால் பயங்கர மனவுளைச்சலுக்கு ஆளானாள் அவள்.

எந்தவொரு தாயும் தன் குழந்தையை வேண்டுமென்றே கீழே போடுவது கிடையாது. அன்று அவளுக்கு நடந்தது ஒரு விபத்துதான். தன் குழந்தை கீழே விழுவதைக் கண்டு ஒரு தாயாக அவள் வேதனைப்படுவதைவிடவா மற்றவர்கள் வேதனைப்படப் போகிறார்கள்?.

ஏற்கனவே குழந்தை விழுந்துவிட்டதே என்று குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருந்த அவளுக்கு, அவளுடைய மாமனாரும், மாமியாரும் பேசிய பேச்சுக்கள் இன்னும் மிகுந்த மனவலியைத் தந்திருக்கிறது. இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் வீட்டிலுள்ள பெரியவர்கள், ஒரு தாயாக குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமே தவிர கடுஞ்சொற்களால் நோகடிக்கக்கூடாது.

குழந்தை கீழே விழுந்ததும் அவளை ஆயிரம் குறைகூறும் வீட்டிலிருக்கும் பெரியவர்கள், பிஞ்சிக் குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும்? என்பதை அவளுக்கு முன்கூட்டியே சொல்லியிருந்தால், ஒருவேளை அந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் இல்லையா? இதையேன் பெரியவர்கள் புரிந்து கொள்வதில்லையென எனக்குத் தெரியவில்லை.

நான்கு மாதக் குழந்தை எப்படி அவ்வளவுதூரம் நகர்ந்து வந்து,கீழே விழுந்தது டி? அக்குழந்தைக்கு சரியாகக் குப்புற விழவே தெரியாது? எப்படிக் கீழே விழுந்திருக்கும் ? இத்தனைக்கும் நான் கட்டிலின் நடுவில்தான் போட்டிருந்தேன்?” என்று அத்தனை கேள்விகளை என்னிடம் வைத்தாள் அவள்.

நான் அவளிடம் , “இப்போதெல்லாம் குழந்தைகள் ஹைப்பர் ஆக்டிவ்வாக இருக்கிறது டி. எப்போது எதை செய்யும் என்று நம்மால் கணிக்கவே முடியவில்லை. அதனால் நாம்தான் குழந்தைகளை மிக கவனமாகப் பார்க்க வேண்டியுள்ளது. என் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களிலேயே அவன் கால், கைகளை வேகமாக உதைத்து முண்டிக்கொண்டே கட்டில் முழுவதும் சுற்றி வருவான்”.

அதற்குப் பின் நாங்கள் கட்டிலிலிருந்து எங்கே விழுந்துவிடுவானோ என்று, கட்டிலை ஓரம் கட்டிவிட்டு மெத்தையை மட்டும் தரையின் மேல் போட்டுப் பயன்படுத்துகிறோம். அதுதான் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு, நாமும் குழந்தை தூங்கியதற்குப்பின்,”குழந்தை எங்கே கீழே விழுந்துவிடுவானோ?” என்ற பயமில்லாமல் நம் மற்ற வீட்டுவேலைகளை செய்யலாம்” என்று அவளுக்கு அறிவுரை சொன்னேன். அவளும் “சரி டி, இனிமேல் நாங்களும் அதையே பின்பற்றுகிறோம். தேங்க்ஸ் டி” என்று சொன்னாள்.

இது என் தோழிக்கு மட்டுமல்ல, கைக் குழந்தையை வைத்திருக்கும் அனைவருக்கும் ஏற்ற அறிவுரைதான். அதனால் மக்களே உங்கள் குழந்தைகள் பிறந்து இரண்டு மாதமேயான பச்சைக் குழந்தையானாலும் சரி, கட்டிலில் போடுவதைத் தவிருங்கள். அப்படி வேறு வழியில்லாமல் கட்டிலில் போட்டாலும் மிக கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு வேறு வேலை ஏதாவது இருந்தால், தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் குழந்தையை வேறு யாரையாவது பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு செல்லுங்கள். தனியாகக் குழந்தைகளைக் கட்டிலில் போடாதீர்கள்.! பிஞ்சிக் குழந்தைகளைக் கையாளுவது என்பது கடினமான ஒன்றே! எனவே ஒவ்வொரு விஷயமும் நாம் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் !.

Exit mobile version