தயவு செய்து குழந்தைகளிடம் இப்படி சொல்லாதீர்கள்!

குழந்தைகள் பிறந்த நாட்களில் இருந்தே தன் அம்மாவிடம் ‘மழலை மொழி’ பேச ஆரம்பித்துவிடுவார்கள. எப்படி என்று கேட்கிறீர்களா?, அவர்கள் கத்தும் சத்தம்; அவர்களின் அழுகை சத்தம்;அவர்களின் செய்கைகள்; இப்படி ஒவ்வொன்றுமே ஒரு மொழிதான்.

ஆனால் அந்த மழலையின் மொழியானது அக்குழந்தையின் அம்மாவிற்கு மட்டுமே புரியும், மற்றவர்களுக்குப் புரிவதில்லை. குழந்தை பசிக்காக அழுகிறதா? இல்லை தூக்கத்திற்காக அழுகிறதா? என்பதை அக்குழந்தை அழுகின்ற சத்தத்திலேயே அறிந்து கொள்வாள் அக்குழந்தையின் தாய். ஒரு குழந்தை பிறந்து மூன்றாவது மாதத்திலே மற்றவரின் முகம் பார்க்கப் பழகும். அப்போதுலிருந்தே நாம் குழந்தைக்கு நம் மொழியில் பேச சொல்லிக் கொடுக்கலாம்.

முதலில் குழந்தைகளுக்கு அம்மா, அப்பா, தாத்தா, மாமா போன்ற சின்னச் சின்ன வார்த்தைகளை சொல்லிக்கொடுக்க வேண்டும். அதற்குப் பின் நாம் பறவைகளின் ஒலி, அதாவது “காக்கா எப்படி கத்தும் “கா!கா!” எங்கே நீ சொல்லு..? , அதற்குப் பின் மாடு கத்துகின்ற சத்தம் அதாவது மாடு எப்படி கத்தும் “மா! மா!” எங்க நீ சொல்லு பார்ப்போம்?” இந்தமாதிரி சின்னச் சின்ன ஒலிகளைக் எழுப்பச் சொல்லிக் கொடுத்து உங்கள் குழந்தைகளைத் திரும்பி சொல்ல வைக்க வேண்டும்.இப்படிச் சொல்லிக்கொடுத்தால் அதனைக் குழந்தைகள் எளிதில் கற்றுக் கொள்வார்கள்.

குழந்தைகள் இப்படி சின்ன சின்ன வார்த்தைகளைப் பேச ஆரம்பித்த பின் கொஞ்சம் பெரிய வார்த்தைகளாக சொல்லிக் கொடுக்க வேண்டும். முதன் முதலில் நாம் குழந்தைகளுக்கு கதை சொல்ல ஆரம்பிக்கும் போது, அக்கதையின் மூலமாகவே நிறைய வித்தியாசமான சத்தங்கள் மற்றும் வார்த்தைகளை நீங்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கலாம். நாம் நேரடியாக சொன்னால் நிறைய வார்த்தைகளைக் குழந்தைகள் காதுகொடுத்துக் கேட்காது. ஆனால் ஒரு கதை மூலம் சொல்லும் போது அது குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும். அதனைக் குழந்தை ஆர்வமாகக் கேட்டு எளிதில் கற்றுக் கொள்ளும்..

குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும் போது நாம் கருத்தில் கொள்ள வேண்டியவை;நாம் சொல்லும் ஒவ்வொரு கதையும் அக்குழந்தையின் ஆழ்மனதில் “பசுமரத்தாணி போல” பதிந்துவிடும். ஆகவே நாம் சொல்லும் கதையை உண்மையென நம்பும் அக்குழந்தை அக்கதையில் வரும் குணாதிசயங்களை தனக்குத் தெரியாமலேயே பின்பற்ற ஆரம்பித்துவிடும். ஆதலால் குழந்தைகளுக்கு நல்ல நீதிநெறிக் கதைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

நாம் சொல்லும் ஒவ்வொரு கதையிலும் பொய்,திருட்டு,ஏமாற்றுவது போன்ற கெட்ட விஷயங்கள் எதுவும் இல்லாமல் பார்த்து சொல்ல வேண்டும். நாம் குழந்தைகளுக்கு சொல்லும் பெரும்பாலான பழம்பெரும் கதைகளில் “நரி ஏமாற்றி காக்காவிடம் பிடுங்கி சாப்பிட்டது அல்லது நரி சிங்கத்தை ஏமாற்றி கிணற்றில் தள்ளிவிட்டது, தங்கக் கோடாரி அதிர்ஷ்டத்தில் கிடைத்தது” இந்த மாதிரி விஷயங்கள் தான் நிறைய வருகின்றனர்.

ஆதலால் குழந்தைகள் மனதில் ‘அடுத்தவர்களை ஏமாற்றினால் நாம் ஜெயித்து விடலாம், நமக்கும் அதிர்ஷ்டத்தால் தங்கக் கோடாரி கிடைக்கும்’ என்பன போன்ற கெட்ட எண்ணங்கள் வேரூன்ற ஆரம்பித்துவிடும். ஆதலால் அந்த மாதிரி கதைகளை குழந்தைகளிடம் அப்படியே சொல்லாதீர்கள்.

அக்கதைகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்து “நரியைப் போல் ஏமாற்றுவது தவறு, நாம் எப்பொதும் உழைத்துதான் சாப்பிட வேண்டும், நரியைப் போல் திருடித் திண்பது தவறு, அதிர்ஷ்டத்தை நம்பி உழைக்காமல் இருப்பது தவறு, யாரையும் தாழ்த்திப் பேச கூடாது, உழைத்தால் தான் முன்னேற முடியும்” என்பது போன்ற நல்ல கருத்துக்கள் இருக்குமாறு கதையினை மாற்றி சொல்லுங்கள் .

அப்போதுதான் அக்குழந்தைகளுக்கு நல்ல சிந்தனைகள், நல்லொழுக்கம் என்பது சிறு வயதிலிருந்தே வர ஆரம்பிக்கும். உங்கள் குழந்தைகள் பிற்காலத்தில் குணத்தில் சிறந்தவர்களாகவும் வளருவார்கள். “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பது போல”ஐந்து வயதில் ஒரு குழந்தையின் குணநலத்தை நாம் நல்ல கதைகளின் மூலம் வடிவமைத்தால்தான் ஐம்பது வயதிலும் அக்குழந்தை குணத்திலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கும்” என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Exit mobile version