உங்கள் குழந்தைகள் அடம்பிடித்து அழுகிறதா??

குழந்தைகள் தனக்கு வேண்டியதை எப்படியாவது அடம்பிடித்து வாங்கி விடலாம் என்ற எண்ணத்தோடு வளருவது தவறு.. அப்படி வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் தான் நினைத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக முதலில் தவறான வழிகளை நாடுவார்கள் . அப்படியும் தான் நினைத்தது கிடைக்கவில்லை என்றால் அவர்கள் அதற்காக வாழ்க்கையில் எந்தவித விபரீதமான முடிவிற்கும் செல்வதற்கும் வாய்ப்புள்ளது.. ஆகையால் அடம்பிடிக்கும் குழந்தைகளை ஆரம்பித்தில் இருந்தே நாம் சரியாக கையாள வேண்டும்..

முதன் முதலில் குழந்தைகள் ஒரு பொருளை நம்மிடமிருந்து கேட்க ஆரம்பிக்கும் போது அந்தப் பொருளை நாம் கொடுக்காமல் விட்டுவிட்டால் அக்குழந்தை பல வழிகளில் அப்பொருளை அடைய முயற்சித்துப் பார்க்கும்..

முதலில் சிரித்துப் பார்க்கும் , அதற்குப் பின் பல செய்கைகளைக் காட்டி அப்பொருளை எப்படியாவது அடைய முயற்சி செய்து பார்க்கும்..அப்படியும் நாம் அந்தப் பொருளை பிள்ளையின் கையில் கொடுக்கவில்லை என்றால், இறுதியில் அப்பொருளைக் கேட்டு அழ ஆரம்பிக்கும்.. அப்போது நாம் குழந்தை அழுகின்றதே? என்று பாவப்பட்டு அது கேட்ட பொருளைக் கொடுத்துவிடக் கூடாது..

அப்படி முதல்முறை குழந்தை அழுது அடம்பிடிக்கும் போது அது கேட்கும் பொருளைக் கொடுத்துவிட்டால், அந்த குழந்தையின் மனதில் “நாம் அழுது அடம்பிடித்தால் நாம் நினைக்கும் பொருள் கிடைத்துவிடும் “என்ற எண்ணம் வேரூன்றிவிடும்.. அதற்குப் பின் அக்குழந்தைக்கு நாம் சொல்லிப் புரிய வைப்பது ரொம்ப கஷ்டம்..

குழந்தையின் மேல் பாவப்பட்டு அது கேட்கும் அனைத்தையும் கொடுத்துப் பழக்கினால், பிற்காலத்தில் தான் விரும்பியது கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில் வன்முறையில் ஈடுபடுவது, தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது..

ஆதலால் பெற்றோர்களே ! உங்கள் குழந்தை முதன்முதலில் ஒரு பொருளைக் கேட்டுஅடம்பிடிக்கும்போதே, ”இல்லை,உனக்கு அந்தப் பொருள் கிடையாது” என்று தயங்காமல் சொல்லுங்கள்.. நீங்கள் சொல்லும் வார்த்தையால் அப்போதைக்கு அக்குழந்தை கஷ்டப்பட்டாலும், பின்னாட்களில் அக்குழந்தைக்கு, ”இல்லை, கிடையாது” போன்ற வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வந்துவிடும்.. அதுதான் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கும் நல்லது.. பின்னாளில் எந்தவொரு தோல்வியையும்,ஏமாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளும் குணமுடையவர்களாக உங்கள் குழந்தைகள் வளருவார்கள்..

Exit mobile version