அமெரிக்க வாழ் இந்தியர்களுக்குக் கார் அவசியம் தேவையா?!

நம் உறவினர்களோ இல்லை நண்பர்களோ நம்நாட்டில் இருக்கும்போது மிக எளிமையாக இருக்கிறார்கள். வெளிநாடு சென்றவுடன் ஒரு காரினை வாங்கிக் கொண்டு பந்தாவாகத் திரிகிறார்களே?! என்று நீங்கள் யோசித்திருப்பீர்கள் இல்லையா?

நானும் அப்படி பலசமயம் யோசித்திருக்கிறேன். ஆனால் ஏன் அப்படி வெளிநாட்டிற்கு சென்றவுடன் கார் வாங்குகிறார்கள்! வெளிநாடு செல்லும் அனைவரும் பந்தாவிற்குத்தான் கார் வாங்குகிறார்களா? என்றால், இல்லை என்றுதான் சொல்வேன். பிறகு ஏன் கார் வாங்கிகிறார்கள்??

பஸ், ட்ரெய்ன் வசதி குறைவு!

நம்மூரில் எந்த மூலை, முடுக்குகளுக்கு வேண்டுமானாலும் பஸ், ட்ரெய்ன் மூலம் நம்மால் செல்ல முடியும். ஆனால் நம் ஊரில் உள்ளதைப்போல் அமெரிக்காவில் பஸ், ட்ரெயின் வசதி எல்லாம் அதிகம் இருக்காது. ஏதோ மக்கள்தொகை அதிகமுள்ள ஒரு சில பெரிய மாகாணங்களில் மட்டுமே பஸ், ட்ரெயின் வசதி உள்ளது. மற்றபடி அங்கு மக்கள்தொகைப் பெருக்கம் குறைவாக இருப்பதால் பஸ், ட்ரெயின் வசதியெல்லாம் நம்மூரினைப்போல் இருக்காது.

ஆதலால் கார் இல்லையென்றால்., அலுவலகத்திற்கு மற்றும் மளிகைக் கடைகளுக்கு என்று எங்குமே செல்ல முடியாத நிலை உண்டாகிறது. அதுவும் அங்கே நம் இந்தியப் பொருட்கள் கிடைக்கும் கடைகள் ஒரு ஊரில் இரண்டு மூன்று மட்டுமே இருப்பதால் கார், பைக் எதுவும் இல்லையென்றால், பஸ், ட்ரெய்ன் வசதியும் சரளமாக இல்லாததால் அந்தக் கடைகளைத் தேடிப்பிடித்துப் போய் வாங்குவது என்பது ஒரு சவாலான காரியமாக இருப்பதால், வேறு வழியின்றி கார் வாங்கும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர் அமெரிக்க வாழ் இந்தியர்கள்..

ஆடம்பரத்திற்காக அல்ல, அடிப்படைத் தேவைக்காக!

நம்மூரில் அனைவரும் இருசக்கர வாகனம் வைத்திருப்பதுபோல், வெளியாட்டில் எல்லோருமே கார்தான் வைத்திருப்பார்கள். அது ஏனென்றால் நம்மூரில் இருசக்கர வாகனத்தின் விலை காரின் விலையைவிடக் குறைவாக இருப்பதாலும்.. நம்மூர்த் தட்பவெப்பநிலைக்கு இருசக்கர வாகனமே போதுமானதாக இருப்பதாலும், சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் முதல் பெரிய அளவில் வேலை செய்பவர்கள் வரை எல்லோருடைய வீடுகளிலுமே இருசக்கரவாகனங்கள் வைத்திருக்கிறோம்..

ஆனால் வெளிநாட்டில் அப்படியல்ல, அங்கு உள்ள குளிரான தட்பவெப்பநிலைக்கு இருசக்கர வாகனம் ஏற்றதாக இல்லாததால், பைக் உற்பத்தியைவிட கார் உற்பத்திதான் அங்கு அதிகமாக உள்ளது. உற்பத்தி அதிகமாக உள்ளதால் அதன் விலையும் குறைவாக உள்ளது. அதாவது பைக் அதிக விலைக்கும்,கார் அதைவிடக் குறைவான விலைக்கும் விற்பனை ஆகிறது.

அதனால் தான் அங்கு சாதாரண ஜவுளிக் கடையில் ஊழியராக இருப்பவர்கள் கூட கார்தான் வைத்திருப்பார்கள். ஏனென்றால், அந்நாட்டைப் பொறுத்தவரை கார் என்பது நம்மூரில் பைக் போல அடிப்படைத் தேவையாகிவிடுகிறது. அதனால்தான் இங்கிருந்து அமெரிக்கா செல்லும் நம்மக்கள், அங்கு சென்றவுடன் கார் வாங்கும் நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்.

அதனால் அமெரிக்காவிற்கு செல்பவர்கள் கார் வாங்குவது என்பது பந்தாவிற்காக அல்ல! அத்யாவசியத் தேவைகளுக்காகவே!
அதுமட்டுமில்லாமல், வேலை நிமிர்த்தமாக அமெரிக்காவில் வசிக்கும் நம் நாட்டு இளைஞர்கள் பெரும்பாலானோர் பழைய கார்களையே குறைந்த விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகின்றார் ர்கள்.அதற்குப் பின் இறுதியில் வேலைமுடிந்து இந்தியாவிற்குத் திரும்பி வரும்போது அந்தக் காரை போறவிலைக்கு விற்றுவிட்டு நம்மூருக்கு வந்து விடுவார்கள்.

Exit mobile version