இந்துப்பு என்பது நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் வெள்ளை உப்பைவிட சிறந்தது என்று எல்லோரும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இல்லையா? எதற்காக அப்படி சொல்கிறார்கள்??
ஏன் அப்படி சொல்கிறார்கள்?? என்று எதையுமே சிந்திக்காமல் பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவுக்காரர்கள் எல்லோரும் பயன்படுத்துவதால் நீங்களும் பயன்படுத்துகிறீர்கள் அப்படித்தானே?? வாருங்கள் இப்போதாவது இந்துப்பு என்றால் என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்..
இந்துப்பு என்றால் இமயமலைக்கு அருகில் அமைந்துள்ள கெஹ்ரா உப்பு சுரங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இளஞ்சிவப்பு நிற உப்பு ஆகும். இது இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வகையான உப்பு. இது தாதுக்கள் நிறைந்தது மற்றும் பல நம்பமுடியாத பல சுகாதார நன்மைகளையும் அளிக்கிறது.
அதனால்தான் இது சாதாரணமாக நாம் பயன்படுத்தும் உப்பைவிட சிறந்தது என எல்லோரும் சொல்கிறார்கள். இதில் 84 வெவ்வேறு தாதுக்கள் மற்றும் சுவடு கூறுகள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். குறிப்பாக அதிலுள்ள இரும்புச் சத்துதான் அதன் சிறப்பியல்பான இளஞ்சிவப்பு நிறத்தை தருகிறது.உப்பில் பொதுவாக சோடியம் குளோரைடு அதிகம் உள்ளது.
உப்பானது நீரை ஆவியாக்கி உறையச் செய்வதன் மூலமாகவோ அல்லது நிலத்தடி உப்பு சுரங்கங்களில் இருந்து திட உப்பை எடுப்பதன் மூலமோ தயாரிக்கப்படுகிறது. அதற்குப்பின் நாம் வாங்கும் மளிகை கடையை அடைவதற்கு முன்பே சுத்திகரிக்கப்பட்டு அதிலுள்ள சில கனிமங்கள் நீக்கப்பட்டு விடுகிறது. மேலும் அயோடின் குறைபாட்டைத் தடுக்க உப்போடு அயோடின் சேர்க்கப்பட்டு அதற்குப்பின்தான் விற்பனைக்கு வருகிறது.
மனிதர்களாகிய நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவை சுவைக்கவும், பாதுகாக்கவும் உப்பைப் பயன்படுத்துகின்றோம். நம் உடலில் திரவ சமநிலை, நரம்பு கடத்தல் மற்றும் தசை உள்ளிட்ட பல உயிரியல் செயல்பாடுகளிலும் உப்பிலுள்ள சோடியம் முக்கிய பங்கு வகிக்கிறது. உப்பு பெரும்பாலும் சோடியம் குளோரைட்டைக் கொண்டுள்ளதால், உடலில் முக்கியமான செயல்முறைகளை சீராக்கவும் உதவுகிறது. அதனால் நாம் உணவில் உப்பு அல்லது சோடியம் இருப்பது முற்றிலும் அவசியம்.
இருப்பினும், பல சுகாதார வல்லுநர்கள் அதிக சோடியம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர், அதனால் அதிகப்படியான சோடியம் உள்ள வெள்ளை உப்பை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய இந்தமாதிரியான ஆபத்துகள் காரணமாகத்தான் பலர் இளஞ்சிவப்பு இமயமலை உப்பைப் பயன்படுத்துகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்துப்பில் சாதாரண உப்பைவிட சோடியம் குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற பொதுவான தாதுக்களும், ஸ்ட்ரோண்டியம் மற்றும் மாலிப்டினம் போன்ற சில அரிய வகைத் தாதுக்களும் இருப்பதால், இது சாதாரண வெள்ளை உப்புக்கு ஆரோக்கியமான மாற்று என்றே ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அதனால் நாமும் நம்முவோம்.
அதனால் மக்களே உப்பு போட்டு சாப்பிட்டால்தான் ரோஷம் வரும் என்று அளவுக்கதிகமான உப்பைப் போட்டு சாப்பிடாதீர்கள், ரோஷமெல்லாம் ஒன்றும் வராது, மாறாக ரத்த அழுத்தம், இதய நோய்கள்தான் வரும். அதனால், எந்த உப்பாக இருந்தாலும் அளவோடு பயன்படுத்தினால் நலம்.