ஆண் பிள்ளைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு?!

நான் வயதிற்கு வந்தவுடன் என் வீட்டில் எனக்கென்று நிறைய விஷயங்கள் சிறப்பாக செய்தார்கள். எனக்கு மட்டுமல்ல பொதுவாக பெண் பிள்ளைகள் வயதிற்கு வந்தவுடன் அவர்களுக்கு அந்த வீட்டில் கவனிப்பே பலமாக இருக்கும். தினமும் அப்பிள்ளைகளுக்கு உளுந்தம் களி, நாட்டுக்கோழி முட்டை,ஆடு, கோழி,என விதவிதமாக சமைத்துக் கொடுத்து, அப்பிள்ளைகளுக்கு அச்சமயத்தில் தேவையான ஓய்வினைக் கொடுத்து அப்பிள்ளைகளை வீட்டில் உள்ள அனைவரும் பக்குவமாகப் பார்த்துக் கொள்கிறார்கள்..இப்படி என் வீட்டிலும் அச்சமயத்தில் எனக்கென்று சிறப்பான கவனிப்பு இருந்தது.

அப்போது என்னுடைய தம்பி,”ஏன் அக்காவிற்கு மட்டும் இந்த சிறப்பு கவனிப்பு?? “என்று என்னைப் பார்த்துப் பொறாமை கொள்வான். அப்போது என் வீட்டுப் பெரியவர்கள் ,”அவள் வயதிற்கு வந்த பெண் பிள்ளை எனபதால் அவளுக்கு இந்த சிறப்புக் கவனிப்பு“ என்று சொல்வார்கள். ஆனால் என் தம்பி,”அப்படியென்றால் நான் எப்போது வயதிற்கு வருவேன் அம்மா ?? நான் வயதிற்கு வந்தால் என்னையும் இப்படிக் கவனிப்பீர்களா?” என்று என் அம்மாவிடம் கேட்பான்.. அச்சமயம் எல்லோரும் அவனைக் கேலி செய்து சிரித்தார்கள். ஆனால் அது சிரிப்பதற்கான விஷயமல்ல சிந்திக்க வேண்டிய விஷயம்தான். ஏன் ஆண்கள் வயதிற்கு வருவதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை?? ஆண்களும் வயதிற்கு வரும் நேரம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்தானே?? என்று நான் யோசித்ததுண்டு.

அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு பெண்ணும் வயதிற்கு வந்தவுடன் அவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் அப்பெண்களுக்கு நீ இனிமேல் பெரிய பிள்ளை,அதனால் நீ குனிந்த தலை நிமிராமல் நடக்க வேண்டும், ஆண்களிடம் பார்த்து நடந்து கொள்ள வேண்டும், இரவு நேரம் வீட்டைவிட்டு தனியாக எங்கும் வெளியே செல்லக் கூடாது!! என்பன போன்ற பல அறிவுரைகளை அப்பெண்களுக்கு வழங்குகின்றனர்.

அதனால் வயதிற்கு வந்த பெண் பிள்ளைகள் அவர்கள் பருவமடைவதால் தோன்றும் இயற்கையான உடல் மாற்றங்களையும், மன மாற்றங்களையும் புரிந்து கொண்டு அதனை ஓரளவிற்கு சமாளித்து நல்வழியில் செல்கின்றனர்.
ஆனால் அதே ஒரு ஆண்பிள்ளை பருவமடையும் நேரம் அப்பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் அவனுக்கு அந்த சமயத்தில் அவசியமாகத் தேவைப்படும் அறிவுரைகளைக்கூட வழங்குவதில்லை. ஆண் பிள்ளைகளுக்கும் பருவமடைதலைப் பற்றிய விழிப்புணர்வு தேவைதானே??

ஆண்பிள்ளைகளுக்கும் அச்சமயத்தில் வீட்டிலிருக்கும் பெரியவர்கள், உறவினர்கள் அறிவுரை வழங்க வேண்டும் இல்லையா?? ஆனால் எந்த வீட்டிலும் ஆண்பிள்ளைகள் பருவமடையும் சமயத்தில் அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குவதேயில்லை. இதனால் வயதில் வரும் மாற்றங்களை சமாளிக்கத் தெரியாமல் அப்பிள்ளைகள் தவறான பாதைக்கு செல்லும் நிலைக்கு ஆளாகின்றனர். அதனால்தான் என்னவோ நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அளவுக்கதிகமாக நிகழ்ந்து வருகிறது.

ஆதலால் ஆண் பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரும், தன் பிள்ளைகள் பருவமடையும் நேரம் அவர்களுக்கு உடலளவிலும், மனதளவில் தோன்றும் குழப்பங்களையும், மாற்றங்கள் பற்றிப் புரிய வைக்க வேண்டும், அச்சமயம் அவர்களுக்கும் ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்துத் தேவையான அறிவுரைகளை வழங்கி,அவர்களைத் தவறான பாதையில் செல்ல விடாமல் தடுக்கும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.!

பெற்றோர்கள் இப்படித் தங்கள் ஆண்பிள்ளைகள் பருவமடையும் நேரம் ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்து, அவர்களுக்கும் ஒழுக்கம் சொல்லிக் கொடுத்து வளர்த்தால் மட்டுமே, ஆண்களுக்கும் நல்ல உடல்நிலை மற்றும் தெளிவானதொரு மனநிலை கிடைக்கும். உங்கள் பெண் பிள்ளைகளைப் போல் ஆண்பிள்ளைகளும் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக வளர்வார்கள். இதனால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் குறையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Exit mobile version