பளபள பாத்ரூம்! – சூப்பர் டிப்ஸ்

உலகில் உள்ள அனைவரின் விருப்பமும், அழகான வீடு வேண்டும் என்பது தான்.ஹால், பெட்ரூம், கிச்சன், பாத்ரூம் என இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான், ஒரு வீடு.சில வீடுகளில் பாத்ரூமைப் பராமரிப்பது தான் பெரிய வேலையாக நினைப்பார்கள்.இனி அந்தக் கவலையெல்லாம் வேண்டாங்க.உங்க வீட்லயும் பாத்ரூம் பளபளக்க சூப்பர் டிப்ஸ் இதோ….

சுத்தம் சோறு போடும், இந்தப் பழமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதில் தான் நம் அனைவரின் ஆரோக்கியமும் தொடங்குகிறது. சிலர் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருப்பார்கள்.ஆனால், பாத்ரூமை பொறுத்தவரை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை தான் சுத்தம் செய்வார்கள். ஆனால், சொல்லப்போனால் தினமும் சுத்தம் செய்தாலும் கூட, திருப்தி அளிக்காத ஒரே இடம் என்றால் அது பாத்ரூம் தான்.

நம் வீட்டில், நாம் அதிகம் மெனக்கெடவேண்டிய இடம் எது என்றால், அது கண்டிப்பாக பாத்ரூம் தான். தினமும் பாத்ரூமை சுத்தம் செய்தால் மட்டும் போதாது, அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருள்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். பாத்ரூமை எப்படி பராமரிக்க வேண்டும் என்று சில வழிமுறைகளை கீழே பார்க்கலாம்.

குப்பைகளை நீக்கிவிடுங்கள்

குளியலறையை பொறுத்தவரை அன்றாடம் குப்பைகளை நீக்கிவிடுங்கள். ஷாம்பூ கவர்கள், முடிகள், சோப்பு துண்டு இவை எல்லாவற்றையும் அன்றாடம் எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடுங்கள்.குடும்பத்தில், இந்த பழக்கத்தை எல்லாருக்கும் சொல்லிக் கொடுங்கள். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதில், குடும்பத்தில் உள்ள அனைவரின் பங்கும் அவசியம்.

டாய்லெட்

டாய்லெட் பீங்கான் சுத்தப்படுத்துவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. வினிகரை கொண்டு பீங்கானில் ஸ்ப்ரே செய்து, 8 மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு சாதாரணமாக சோப்பு நீர் விட்டு பிரஷ்ஷை கொண்டு தேய்த்தாலே டாய்லெட் பளிச்சிடும். ஆசிட் பயன்படுத்தும் போது டாய்லெட் பீங்கானின் நிறம் மாறும். ஆனால் வினிகர் பயன்படுத்தி சுத்தம் செய்யும் போது, டாய்லெட் நிறம் மாறாமல் பளிச்சென்று இருக்கும்.பாத்ரூம் டைல்ஸ் மற்றும் தரையையும் வினிகரை கொண்டு சுத்தம் செய்யலாம்.

நறுமணத்துக்கு

குளியலறையில் வாசம் வீசுவதற்கு நறுமணப் பொருள்களை மாட்டி வைக்க பல பொருள்கள் கடைகளில் கிடைக்கிறது. பல நாட்கள் வரை இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இயற்கையாக வீட்டில் கிடைக்ககூடிய நறுமண பொருள்களையும் உபயோகிக்கலாம்.

பஞ்சை உருண்டையாக உருட்டி வைத்துகொள்ளுங்கள். காபி கொட்டையை பொடித்து,  அதனுடன் சரிசம அளவு அந்துருண்டை தூளை சேர்த்து இரண்டையும் கலந்து, வேண்டிய அளவு பன்னீர் விட்டு குழைத்து, இறுதியாக நறுமண எண்ணெய் 10 துளிகள் விடுங்கள். ஓரளவு திரவ நிலையில் இது இருக்கும் போது உருட்டிய பஞ்சு உருண்டையை இதில் நனைத்து உலரவைத்துவிடுங்கள். அவை காய காய மீண்டும் மீண்டும் நனைத்து உலரவைத்து எடுத்தால் நறுமணமிக்க பஞ்சு உருண்டை கிடைக்கும். இதை இரண்டு நாளைக்கு ஒன்றாக பாத்ரூமில் வைத்தால் பல்லி மற்றும் பூச்சிகளும் அண்டாமல் இருக்கும்.

பக்கெட்டுகளில் சுத்தம்

பக்கெட்டுகளில் எப்போதும் நீர் நிரம்பி இருந்தால், பாசி படிந்து நாளடைவில் நிறம் மாறிவிடும். உள்ளே வழவழத்தன்மை வந்துவிடும். பக்கெட் அடிப்புறத்திலும் அழுக்குகள் படிந்துவிடும். நாளடைவில் இதை சுத்தம் செய்யாவிட்டால் பாத்ரூம் பளிச்சென்று இருந்தாலும் பக்கெட் அழுக்குகள் அசிங்கமாக இருக்கும். தினமும் குளித்து முடித்ததும் பக்கெட் நீரை முழுவதும் வெளியே எடுத்து கவிழ்த்து விடுங்கள். இதனால் பாசி பிடிக்காமல் இருக்கும். பளிச்சென்றும் இருக்கும்.

அழுக்குத்துணி

அழுக்குத்துணிகளின் கூடாரம் தான், கொசுக்களின் இருப்பிடமும் கூட. அதனால் பாத்ரூமில் அழுக்கு துணிகளை தொங்கவிடாதீர்கள். குளித்து முடித்த உடனே அதற்கென இருக்கும் கூடையில் எடுத்துப் போடுங்கள். ஒரு நாள் கடந்தாலும் துணிகளில் வாடை அதிகரிக்கும். கூடவே சிறிய கொசுக்கள் வந்து தங்கிவிடவும் செய்யும்.எனவே, அவரவர் துணிகளை,அவ்வப்போது எடுத்து அப்புறப்படுத்திவிட்டால் பாத்ரூமில் நாற்றம் எடுக்காது.மற்றவர்கள் பாத்ரூமை உபயோகப்படுத்தும்போது முகம் சுழிக்கவும் மாட்டார்கள்.

Exit mobile version