நாங்கள் புதிதாக குடியேறிய வீட்டில் தினமும் ஒவ்வொரு பொருள் காணாமல் போய்க்கொண்டே இருந்தது. ஏற்கனவே அந்த ஏரியாவில் திருடர்கள் நிறைய பேர் அலைகிறார்கள் என்று எல்லோரும் சொல்லிக் கேள்விப்பட்டோம்.
அப்போது எங்கள் வீட்டில் பாத்திரம் கழுவுவதற்கும், வீடு துடைத்துப் பெருக்குவதற்கும் ஒரு அக்காவை வேலைக்கு வைத்திருந்தோம். அதுமட்டுமில்லாமல் நாங்கள் அந்த வீட்டில் புதிதாக குடியேறி இருந்ததால் இன்னும் கபோர்டு வொர்க், ஃபர்னிஷிங்க் வொர்க் எதுவும் முடிக்காமல் நிறைய வேலைகள் பெண்டிங்கில் இருந்தது. அதனால் தினமும் சில வேலையாட்கள் எங்கள் வீட்டில் வேலை செய்வதற்காக வந்து போன வண்ணம் இருப்பார்கள்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில்,முதலில் சாப்பிடும் பொருட்கள் காணாமல் போக ஆரம்பித்தது. அப்போது நாங்கள் பெரிதாக எதுவும் கண்டுகொள்ளவில்லை. சரி வயிற்றுப் பசிக்காக வேலை செய்யும் யாராவது எடுத்து சாப்பிட்டிருப்பார்கள் என்று நினைத்து விட்டுவிட்டோம்.
அதன்பின் சின்னச் சின்னப் பாத்திரங்கள் காணாமல் போக ஆரம்பித்தது. அப்போது எனக்கு எங்கள் வீட்டில் பாத்திரம் கழுவும் வேலை செய்யும் அக்கா மேல் ஒரு சந்தேகம் வர ஆரம்பித்தது. சரி சின்னச் சின்னப் பாத்திரங்கள் தானே காணாமல் போகிறது என்று நான் பெரிதாக எதுவும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் “முதலில் இப்படிச் சின்னச் சின்ன பாத்திரங்களைத் திருடுபவர்கள் நாளை விலையுயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்றுவிட்டால் என்ன செய்வது?” என்று மனதிற்குள் ஒரே பீதியாகத்தான் இருந்து கொண்டிருந்தது.
அதற்குப் பின் ஒருநாள் நான் பயந்தவாறே நடந்துவிட்டது. என் கணவருடைய அறையில் இருந்த பென் ட்ரைவ்-வும் காணாமல் போய்விட்டது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை?. யாரை சந்தேகிப்பது என்றே எங்களுக்குத் தெரியவில்லை?. சாட்சி இல்லாமல் யாரையும் சந்தேகிப்பதும் தவறு என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தோம்.என் கணவர், கபோர்டு வேலை செய்வதற்கு வருபவர்களை சந்தேகித்தார். ஏனென்றால் என் கணவர் அறையில்தான் அப்போது அந்த வேலையாட்கள் வேலை செய்து கொண்டுருந்தனர்.
அந்த அறையில்தான் என் கணவர், கம்ப்யூட்டர் மற்றும் பென் ட்ரைவ் இரண்டையும் வைத்திருந்தார்.அதற்குப்பின் இப்படியே விலையுயர்ந்த பொருட்களும் காணாமல் போக ஆரம்பித்தது. ஆனால் சாட்சியங்கள் எதுவும் இல்லாமல் அவர்களிடம் நேரடியாகக் கேட்பதும் தவறென்பதால் நானும் என் கணவனும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தோம். ‘அடுத்து எந்தப் பொருள் திருடு போகப் போகிறதோ?‘ என்று எண்ணி மனமெல்லாம் “திக்திக்”என்று பதட்டமாக இருந்தது.
உடனே என் கணவர் இதற்கு ஒரு ஐடியா சொன்னார். “முதலில் நாம் வீட்டை சுற்றி cctv கேமரா வைத்துவிடுவோம். அதில் பதிவான காட்சிகளை வைத்துப் பார்த்தால்,யார் திருடுகிறார்கள் என்று தெரிந்துவிடும். நாம் சாட்சியைக் கையில் வைத்துக் கொண்டு பேசினால் திருடியவர்கள் கண்டிப்பாக தன் திருட்டை ஒப்புக் கொள்வார்கள். அதற்குப் பின் அவர்களை வேலையை விட்டு நிறுத்திவிட்டு, போலிஸ் ஸ்டேஷனில் கம்ப்லைண்டும் கொடுத்து விடுவோம்” என்று கூறினார். நானும் அதற்கு சரி என்று ஒப்புக் கொண்டேன். அவர் சொன்னதுபோல் வீடு முழுவதும் cctv கேமராவையும் செட் பண்ணிவிட்டோம்.
அதற்குப் பின்னும் பொருட்கள் காணாமல் போன வண்ணமே இருந்தது. cctv கேமராவை பிக்ஸ் பண்ணியதற்கு அடுத்தநாள், கழட்டி வைத்திருந்த என்னுடைய தங்க வளையலும் காணாமல் போய்விட்டது. உடனே நானும், என் கணவரும் அந்த cctv கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய ஆரம்பித்தோம். Cctv கேமராவில் பார்த்த காட்சிகளில் , அத்திருடன் சரியாகக் காலை பத்து மணிக்கு சமையலறைக்குள் புகுந்து கையில் கிடைக்கும் சின்னச்சின்னப் பொருட்களை அள்ளிக் கொண்டு வருகிறான்.
அதற்குப் பின் யாருமில்லாத நேரம் பார்த்து எங்களுடைய பெட் ரூமிற்குள் சத்தமில்லாமல் சென்று நான் கழட்டி வைத்திருந்த தங்க வளையல்களைக் கவர்ந்து வந்தான்.கடைசியில் அவன் திருடிய எல்லாவற்றையும் மொத்தமாக எடுத்துக் கொண்டுபோய் அவனுடைய விளையாட்டுப் பொருட்கள் வைக்கும் பெட்டியில் போட்டுப் பதுக்கி வைத்துக் கொண்டான்.”பலநாள் திருடன், ஒருநாள் அகப்படுவான்” என்று சொல்வதுபோல், எப்படியோ கடைசியில் அன்று அகப்பட்டான் அந்தத் திருடன். எங்கள் வீட்டுச் செல்லத் திருடன் எங்கள் மகன்தான் அவன்..😂
என்ன மக்களே! உங்கள் வீட்டுத் திருடர்களும் இப்படி நிறைய பொருட்களைத் திருடிக் கொண்டுபோய் பதுக்குகிறார்கள் தானே?!