ஒரு குழந்தை பிறந்தவுடன் குழந்தையைப் பார்க்க வரும் உறவினர்கள் அந்தக் குழந்தையைப் பார்த்துவிட்டு, குழந்தையின் உடல்நலம் ,குழந்தையைப் பெற்ற தாயின் உடல்நிலையைப் பற்றி விசாரிக்கிறார்களோ இல்லையோ; மறக்காமல் அந்தக் குழந்தையின் நிறத்தைப் பற்றியும், உருவத்தைப் பற்றியும் விவாதித்து விட்டுதான் செல்வார்கள்.
ஒரு பெண் தன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு முன்னால் எத்தனை வலிகளைக் கடந்து வந்திருப்பாள் என்பது அந்தப் பெண்ணுக்கு மட்டுமே தெரியும். ஒரு பெண்ணானவள் தான் கர்ப்பமடைந்த நாள் முதலே தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை நேசிக்க ஆரம்பித்து விடுவாள். அவள் வயிற்றில் கருவாக வளரும் குழந்தை எந்த உருவத்தில் இருக்கிறது என்பதைப் பற்றியோ,எந்த நிறத்தில் இருக்கிறது என்பதைப் பற்றியோ தாயானவள் ஒருபோதும் சிந்தித்தது கிடையாது..”காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சே” என்று சொல்வதைப்போல் எல்லாத் தாயுமே தன் குழந்தையை பொன்குழந்தையாகத்தான் எண்ணுவாள்!!
இப்படித் தன் குழந்தை வயிற்றில் கருவாக இருக்கும்போதே அதனைத் தன்னுயிரென எண்ணிப் பேணிப் பாதுகாத்து வரும் ஒவ்வொரு தாயும் தன் குழந்தை நல்ல உடல்நலத்துடனும்,ஆரோக்கியத்திடனும் பிறக்க வேண்டுமென அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொள்வாளே தவிர, அக்குழந்தையின் நிறத்தைப் பற்றியோ உருவத்தைப் பற்றியோ அவள் சிந்திப்பதேயில்லை.
கர்ப்பத்தில் தன் குழந்தையை அரும்பாடுபட்டுத் தன் மனதிலும், வயிற்றிலும் சுமக்கும் பெண்ணானவள் அக்குழந்தையை இந்த உலகிற்குக் கொண்டு வருவதற்கு முன்பு உடலளவிலும் மனதளவிலும் அத்தனை வலிகளையும், வேதனைகளையும் அக்குழந்தைக்காக அனுபவித்திருப்பாள்..ஆனால் அதற்காக அவள் ஒருபோதும் சலித்துக் கொள்வதில்லை.தன் குழந்தைக்காக அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு வலியையும் சுகமான வலியாகவே எண்ணுகிறாள் தாயானவள்!!
அப்படிக் கஷ்டப்பட்டுத் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு தாய் தன் குழந்தை பிறந்தவுடன் மருத்துவரிடம் கேட்கும் முதல் கேள்வி,”என் குழந்தை நலமாக இருக்கிறதா?” என்பது மட்டும்தான். ஆனால் பிறந்த குழந்தையைப் பார்ப்பதற்கு செல்லும் உறவினர்களின் கேள்வியோ,” குழந்தை என்ன நிறத்தில் உள்ளது?”,”பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது?”என்பதாகத்தான் உள்ளது.
குழந்தையைப் பெற்ற தாயானவள் தன் குழந்தையை ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த மகிழ்ச்சியில் இருக்கும் அந்த நேரத்தில்,குழந்தையைப் பார்க்க வருகிறேன் என்ற பெயரில் வரும் உறவினர்கள்,”குழந்தை ஏன் இவ்வளவு கருப்பாக உள்ளது?” “குழந்தைக்கு அப்பா மாதிரி பெரிய மூக்கா இருக்குதே?? ”குழந்தைக்கு காது கருப்பா இருக்கிறதால வளர வளரக் குழந்தை கருப்பா மாறிடுவான் போல” அப்படி இப்படினு இன்னும் நிறைய கேள்விகளைக் கேட்டு அக்குழந்தையைப் பெற்ற தாயின் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
தன் பிள்ளையை ஆரோக்கியமாகப் பெற்றெடுத்துவிட்டோம் என்ற மனநிம்மதியில் இருக்கும் தாயானவள் இவர்கள் கேட்கும் கேள்வியால்,”நம் பிள்ளை ஏன் கருப்பாக இருக்கிறது??, நம் பிள்ளைக்கு ஏன் மூக்குப் பெரிதாக இருக்குறது?? என்று தன் மனதில் தேவையல்லாமல் எழும் குழப்பத்தால், மன உளைச்சலுக்கு ஆளாகிறாள்.. அவள் பிரசவித்த வேதனையைவிட அதிகமான வேதனையை அவர்கள் கேட்கும் கேள்விகளால் அவள் உணர்கிறாள்..
குழந்தையைப் பார்க்க வரும் உறவினர்கள் குழந்தையின் உருவத்தைப் பற்றி ஏதாவதொரு குறையைச் சொல்லிவிட்டு அடுத்த நொடியில் அதைப்பற்றி பேசியதையே அவர்கள் அவர்கள் மறந்து சென்றுவிடுவார்கள். ஆனால் அக்குழந்தையுப் பெற்றத் தாயின் மனமோ அதைப் பற்றி நினைத்து நினைத்து வருந்திக் கொண்டேயிருக்கும்.
ஆதலால் தயவுசெய்து பிறந்த குழந்தையைப் பார்க்க செல்பவர்கள் அக்குழந்தையின் நிறத்தைப் பற்றியோ, உருவத்தைப் பற்றியோ விவாதிப்பதை விடுத்து அந்தக் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும், அந்தக் குழந்தையின் தாயானவள் தன்னுடைய கர்ப்பகாலத்தில் அனுபவித்த சிரமங்கள் பற்றியும், அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க அவள் தாண்டி வந்த பிரசவ வலியைப் பற்றியும் கொஞ்சம் கேளுங்கள்..
அரும்பாடுபட்டு ஒரு புதிய உயிரை இந்த பூமிக்குக் கொண்டு வருகின்ற தாயினை பிரசவித்த தருணத்தில் பெருமிதமாக உணர வைக்க வேண்டுமே தவிர அச்சமயத்தில் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு அவள் மனதை நோகடிக்கக் கூடாது என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் வைத்து செயல்படுவோம்..
இனிமேலாவது பிறந்த குழந்தையைப் பார்க்க செல்லும் முன் இந்த மாதிரிக் கேள்விகளைத் தவிர்த்து, குழந்தை பெற்ற தாய் மற்றும் சேயின் உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும், அதற்காக அவர்கள் கடந்து வந்த பாதையைப் பற்றியும் முதலில் கேட்போம்.. ஒரு குழந்தை பூமிக்குள் அடியெடுத்து வைக்கும் அந்த இனிமையான தருணத்தில், அந்தக் குழந்தையைப் பெற்ற தாயினைப் பெருமிதமாக உணர வைப்போம்!!