செம்பு பாத்திரம் பளீச்-னு ஆகணுமா?? இத கொஞ்சம் ட்ரை பண்ணுங்க…

செம்பு பாத்திரம் பல நன்மைகளை வாரி வழங்குகின்றன. அவற்றில் நீர் குடிப்பது, சாப்பிடுவது மற்றும் சமைப்பது என எப்படி உபயோகித்தாலும் நன்மை நிறைய உண்டுதான்.ஆனால்,  அதை முறையாக பராமரிக்க முடியாததாலே, அநேகர் அதை உபயோகிப்பது இல்லை.அதை பராமரிக்கும் முறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஓர் நாள் இரவு முழுவதும் செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி வைத்து, தினமும் காலை வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்து வந்தால், பல்வேறு உள்ளுறுப்புகளுக்கும் நல்லது.மேலும், ஆயுர்வேதத்தின் படி, செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவதால், மூன்று தோஷங்களான வாதம், கபம் மற்றும் பித்தம் மூன்றும் சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது. நிறைந்த நன்மைகளை கொண்டுள்ள செம்பை, முறையாக பராமரிக்காவிட்டால், நாட்கள் செல்ல செல்ல செம்பு பாத்திரம் கறை படிந்து கருப்பு நிறமாக மாறிவிடும்.

செம்பு பாத்திரத்தை எப்படி வாங்கினோமோ அப்படியே வைத்திருப்பது என்பது மிகவும் கடினமான வேலை. ஆனால், கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை முயற்சி செய்து பாருங்கள். பழைய பாத்திரமா இப்படி ஜொலிக்கிறது என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

எலுமிச்சை மற்றும் உப்பு

இவை இரண்டுமே சமையலறையில் எப்போதும் இருக்கும் பொருட்கள்.சிறிது உப்பை, எலுமிச்சை சாறுடன் சேர்த்து கலந்து செம்பு பாத்திரங்களை தேய்க்கவும். பாத்திரத்தின் அடியில், விளிம்புகளில் மட்டும் கறை சற்று அடர்த்தியாக படிந்திருக்கும். அந்த இடங்களில் உப்பு மற்றும் எலுமிச்சை பேஸ்ட்டை தேய்த்து ஒரு அரை மணிநேரம் ஊற விட்டு, பின்பு தேய்க்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பாத்திரம் புதியது போல் ஜொலிக்கும்.

வினிகர்

வீட்டில் எலுமிச்சை இல்லாத பட்சத்தில் அதற்கு பதிலாக வினிகரை உபயோகிக்கலாம். எலுமிச்சை எப்படி உபயோகிப்பதோ அப்படியே தான் வினிகரையும் உபயோகிக்க வேண்டும். சிறிது வினிகரில் உப்பை சேர்த்து, கரைந்ததும் பாத்திரத்தை நன்றாகத் தேய்க்கவும்.

கெட்ச் அப், ஆலிவ் ஆயில்

கெட்ச் அப்பை எப்படி இதற்கெல்லாம் உபயோகிப்பது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கெட்ச் அப்பில் உள்ள இயற்கை அமிலத்தன்மை செம்பு கறைகளை போக்கிடுவதில் விரைந்து செயல்படக்கூடியது. பாத்திரத்தின் மீது சிறிது கெட்ச் அப்பை தடவி, சில நிமிடங்கள் ஊற விட்டு விடவும். பிறகு பாத்திரத்தை மிருதுவான ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்தால் கறைகள் சுலபமாக நீங்கிவிடும். பாத்திரத்தை தேய்த்து கழுவிய பிறகு, சிறு துணியில் ஆலிவ் ஆயிலை தொட்டு, பாத்திரத்தின் மீது தடவவும். இப்படி செய்தால் நீங்களே வித்தியாசத்தை கண்கூடாக பார்க்கலாம்.

காப்பர் பாலிஷ்

இந்த காப்பர் பாலிஷை வீட்டிலேயே செய்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம். அதற்கு முதலில், சிறிது மாவை, உப்பு மற்றும் சோப்பு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன், சிறிது வெள்ளை வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொண்டு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொண்டு, மிருதுவான ஸ்பாஞ்ச் உபயோகித்து செம்பு பாத்திரத்தை கறை படிந்த இடங்களில் தேய்க்கவும். பாத்திரத்தை கழுவிய பின்னர், மென்மையான துணி உபயோகித்து நன்கு துடைத்து வைக்கவும்.உங்க பாத்திரம் பளீச்னு ஆகிடும்.

உப்பு, புளி

உப்பு மற்றும் புளி வைத்து, வீட்டில் மற்றப் பாத்திரங்களை தேய்ப்பதுப் போல் தேய்க்கவும்.

பேக்கிங் சோடா

செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா எப்போதுமே சிறந்தது. பேக்கிங் சோடாவுடன், எலுமிச்சை சாறு கலந்து உபயோகிக்கலாம் அல்லது வெறும் பேக்கிங் சோடாவை மட்டுமே கூட உபயோகிக்கலாம்.

வினிகர், மாவு

ஆரம்பத்தில் வினிகருடன் உப்பு சேர்த்து உபயோகிப்பது பற்றி பார்த்தோம். இப்போது, உப்புடன் சிறிது மாவை உபயோகிக்கலாம். ஒரு டேபிள் ஸ்பூன் உப்பை, ஒரு கப் வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன், சிறிது மாவை சேர்த்து கலந்து, பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளவும். தயாரித்த பேஸ்ட்டை செம்பு பாத்திரத்தில் கறை படிந்த இடங்களில் தடவி, ஒரு 15 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு, வெதுவெதுப்பான நீர் கொண்டு பாத்திரத்தை கழுவவும்.

Exit mobile version