திமுக மகளிர் அணிச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நேரலையில் கலந்துரையாடினார்.
பெரியாரின் இனமானம், பிடித்த உணவகம், படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் என்று நேயர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். குறிப்பாக, பெண்கள் அரசியலில் சந்திக்கும் சவால்கள் குறித்த கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு நிறைவேறாமல் 25 ஆண்டுகள் நிறைவேறிவிட்டதைச் சுட்டிக்காட்டிய கனிமொழி “பெண்கள் அரசியலில் ஈடுபடுவது அவ்வளவு எளிதானதல்ல.
என்னதான் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு இருந்தாலும் அரசியலில் பெண்கள் சந்திக்கும் போராட்டங்கள், நியாயமாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள், உழைக்கிற பெண்களுக்குக் கிடைக்கக் கூடிய அங்கீகாரம் என்று நிறையச் சவால்கள் இருக்கிறது.
ஓரிடத்தில் குவிந்திருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதற்கு சமூகம் மறுக்கிறது, அதிலும் பெண்களுக்கு என்றால் பல சிக்கல்கள் கொடுக்கக்கூடிய ஒன்றாகிவிடுகிறது” என்று அதிரடியாய் பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், சென்னை சங்கமத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றோம், இந்த வருடம் மீண்டும் சென்னை சங்கமம் நிகழுமா? என்று கேட்ட கேள்விக்கு, “தலைவர் கலைஞர் ஆவலோடும், பெருமையோடும் சென்னை சங்கமத்தை நடத்த உறுதுணையாக இருந்தார்.
கொரோனா சூழல் குறைந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் அனுமதி பெற்று, மீண்டும் சென்னை சங்கமம் நிச்சயமாக நடத்தப்படும்” என்று உறுதியளித்திருக்கிறார் எம்.பி. கனிமொழி.