ஆன்லைன் சூதாட்டத்தை வைத்து அரசியல் விளையாட்டு

ஆன்லைன் சூதாட்டத்தால் பல உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பலரும் பணத்தையும் நேரத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என சட்டமன்றத்திலே கடந்த அக்டோபர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. அது ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அக்டோபர் மாதம் அனுப்பப்பட்ட அந்த மசோதாவில் எந்தத் தவறும் நிகழ்ந்து விடக் கூடாது என நான்கரை மாதங்களுக்கும் மேலாகப் பொறுமையாக வாசித்த ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசிற்கு என்த முகாந்திரமும் இல்லை எனப் பதில் சொல்லி மசோதாவை திருப்பி அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக ஏற்கனவே எட்டுக் கேள்விகளை ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பியிருந்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சென்று விளக்கம் அளித்து விட்டு வந்த பின்பும், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்த தடை விவகாரத்தை மாநில அரசு எப்படிச் செய்ய முடியும் என விளக்கமும் ஆளுநர் தரப்புக் கேட்டிருக்கிறது. இதுவரை 44 பேர் வரை இறந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், எதன் அழுத்தத்தால் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பி உள்ளார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு அரசால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்திற்கும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தடை சட்ட மசோதாவிற்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லாத நிலையில், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் தடை சட்ட மசோதாவிற்கு காலம் தாழ்த்தியதோடு திருப்பி அனுப்பியது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

மாநில அரசுகளோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆளுநர்களுக்கு பலமுறை அறிவுறுத்தி உள்ளது. அதோடு இந்திய அரசியலமைப்புச் சட்டம் இருநூறில் மிகத் தெளிவாக இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். ஒரு மாநில ஆளுநர் சட்டமன்றதால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒப்புதலுக்கு சென்றால் அதற்கு ஒப்புதல் அளிக்கலாம், அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சந்தேகங்கள் கேட்கலாம், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம், தன்னிடம் தொடர்ந்து ஆய்வுக்காக வைத்துக் கொள்ளலாம், ஆனால் திருப்பி அனுப்புவது முறையல்ல என்றார் சபாநாயகர் அப்பாவு.

அதே போல ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றம் கொண்டு வருவதற்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் எந்த சட்டத்தின் அடிப்படையில் குறிப்பிடுகிறார் என்றும், பேரவைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான அந்த வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்ட சபாநாயகர் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது மூலம் ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு எதிராகத்தான் ஆளுநர் இருந்து இருக்கிறார் என்றார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 200 சரியாக படித்துவிட்டு ஆளுநர் அந்த வார்த்தைகளை போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும் என கருதுவதாகவும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்.பி கள் பலரும் பேசியிருக்கிறார்கள்.ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் மாநிலப் பட்டியலில் தான் உள்ளது என்றும் இந்தியாவில் உள்ள 17 மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராக தடை சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் எனவும் ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே இது புதிதாக கொண்டுவரப்பட்ட சட்டம் கிடையாது என்றார்.

நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அமைச்சர் ரகுபதி, எங்களுக்கு அதிகாரம் உண்டு. மசோதாவை மீண்டும் நிறைவேற்றிக் காட்டுவோம் என சவால் விடுத்துள்ளார். மீண்டும் இது குறித்த விவாதங்கள் எழும் என எதிர்பார்க்கலாம். திறமையைக் கொண்டு விளையாடலாம் என்றிருந்த விளையாட்டு உயிரைப் பறிக்கும் எமனாக மாறும் போது அதற்கான சட்டங்களை முறைப்படுத்துவதுதான் மாநிலத்தின் முதல் குடிமகனுக்கும், அரசுக்குமான கடமையாகும். அதை விடுத்து அதை வைத்து விளையாடிக் கொணடிருப்பது எவ்வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

Exit mobile version