முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதன் பேரில் நெதர்லாந்தில் இருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் இறக்குமதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதால் ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்வதிலும் அண்டை மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் காரணமாக நெதர்லாந்தில் இருந்து இந்திய ஏர்போர்ஸ் விமானம் மூலமாக ஆக்சிஜன் சென்னை வந்தடைந்து இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள டிவிட்டர் தகவலில், 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4 கிரயோஜெனிக் கண்டெய்னர்களில் ஆக்சிஜன் வந்திருப்பதாக கூறியுள்ளார். இதுமட்டுமின்றி சிங்கப்பூரில் இருந்தும் 500 சிலிண்டர் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போதுவரை தமிழகத்திற்கு 480 – 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் 440 – 470 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை உள்ளது.
இதில் தமிழகத்துக்கு மத்திய அரசு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்தது. இதன் அளவை அதிகப்படுத்த வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதன் காரணமாக மத்திய அரசின் ஒதுக்கீடாக 419 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது. அடுத்த 2 வாரங்களில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை 840 மெட்ரிக் டன்னாக உயரலாம்.