கட்சியின் கொள்கையையும் இலட்சியத்தையும் தான் பேச வேண்டும், யார் ஆம்பளை என்று கேட்பதற்காகவா எடப்பாடி பழனிச்சாமி கட்சித் தலைவராக உள்ளார் என கே.எஸ் அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் உத்தம்குமார்ரெட்டி ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவர்கள் கோபண்ணா,பொன்கிருஷ்னமூர்த்தி, மாநில பொது செயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மூன்று தினங்களாக ஈரோடு பகுதியில் பிரச்சாரம் செய்தேன். மக்களிடம் எழுச்சி உள்ளது. மக்களை சிறை பிடித்ததாக அதிமுகவினர் இல்லாத குற்றச்சாட்டை பரப்புகின்றனர். தோல்வி பயத்தில் அதிமுக குற்றம் சாட்டுகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு தான் பண பலம் அதிகம் உள்ளது.
அதிமுகவின் தொண்டர்களே அவர்களது கூட்டங்களுக்கு செல்வதில்லை. அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். அதிமுகவினர் இல்லாத குற்றச்சாட்டினை பரப்பி வருகின்றனர். அதிமுகவால் தேர்தலை சந்திக்க முடியவில்லை. அதிமுகவின் நண்பர்களும் அவர்களது கட்சியினரும் பணியாற்ற தயாராக இல்லை. நல்ல முறையில் தேர்தல் நடைபெறுகிறது. வன்முறை கிடையாது அத்துமீறல்கள் கிடையாது. அவர் அவர்கள் ஓட்டு கேட்கிறார்கள் விருப்பமுள்ளவர்கள் ஓட்டு போடப் போகிறார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு அமைச்சர்கள் பணியாற்றவில்லை. அமைச்சர்கள் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தால் கூட அவர்களது துறை இயங்கிக் கொண்டுதான் இருக்கும். பணம் கொடுப்பதால் யாரும் வாக்கு செலுத்தி விட மாட்டார்கள். மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். நாம் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொண்டால் தான் வெற்றி பெற முடியும். கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு உள்ள பண பலத்தை விட வேறு யாருக்கும் கிடையாது.
தமிழகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் அரசியல் தெரியும் கூலி வேலை செய்பவர்கள் முதல் அதிகாரிகள் வரை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் தெளிவாக முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த முறை ஈரோட்டில் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது மக்கள் செல்வாக்கிலா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு,
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது கூட மக்கள் செல்வாக்காக இருக்கலாம். அதே போல ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்ட அதே கேள்வியை நாங்கள் கேட்க எவ்வளவு நேரம் ஆகிவிடும். கட்சியின் லட்சியத்தையும் கொள்கையையும் தான் பேச வேண்டும் ஆம்பளையா என்று கேள்வி கேட்க வா அவர் கட்சியின் தலைவராக இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினோ அல்லது ராகுல் காந்தியோ எங்கேயாவது மண்டியிட்டு பார்த்திருக்கிறீர்களா? இதிலிருந்து யார் ஆம்பளை என்று தெரிந்துவிடும் என தெரிவித்தார்