வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என துணை முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே டிசம்பர் 1ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தை இதற்காக முன்னெடுத்து வருகிறது பாமக. இதுவரை மூன்று கட்ட போராட்டங்கள் நிறைவடைந்துவிட்டன.
பாமகவின் அழுத்தத்தை அடுத்து இட ஒதுக்கீடு வழங்குவதற்கான முதற்கட்டமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். ஆனால், வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதற்கான தந்திரமாகமே தமிழக அரசின் நடவடிக்கையைப் பார்க்க வேண்டியிருக்கிறது ராமதாஸ் விமர்சித்தார்.
அத்துடன் இடஒதுக்கீட்டுக்காக இந்தியாவே திரும்பிப் பார்க்கும் போராட்டம் நடைபெறும் எனவும், தானே களத்தில் இறங்கி போராடுவேன் என்றும் அறிவித்தார் ராமதாஸ். இதனிடையே துணை முதல்வர் பன்னீர்செல்வம், வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது. அப்படி அளித்தால் அது மற்ற சமுதாயங்களை பாதிக்கும் என தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து, பாமகவினர் பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட ஆரம்பித்தனர். ஆனால், தான் அப்படி சொல்லவில்லை என மறுத்துள்ளார் பன்னீர்செல்வம்.
read more: பக்தியை அரசியல் வியாபாரமாக மாற்றுகிறார்கள்: பாஜகவை சீண்டிய ஸ்டாலின்
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று, வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.